விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே எட்டக்காபட்டி கிராமத்தில் பேன்சி ரக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் மெக்னீசியம் கட்டிகளை உருக்கி அலுமினிய பவுடராக தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்பிரபு(30), ஞானசேகரன்(40) சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இங்கு 3 தகர கொட்டைகைகளில், ஒரு அறையில் வழக்கம் போல் செவ்வாய்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில், மாலையில் மெக்னீசியம் கட்டிகளை உருக்கி அலுமினிய பவுடராக தயாரித்ததை ஓரப்பகுதியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட உராய்வினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பணியில் ஈடுபட்டிருந்த எட்டக்காபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(35), சரவணன்(30), பெருமாள்சாமி(35), ராஜேஷ்கண்ணன்(35), ரெங்கசமுத்திரபட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(37), உரிமையாளர்களான வெங்கடேஷ்பிரபு, ஞானசேகரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.