ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விளைபயிர்களை நாசம் செய்யும் காட்டு விலங்குகள்: விவசாயிகள் புகார்

விளைபயிர்களை நாசம் செய்யும் காட்டு மிருகங்களால் விவசாயிகள் நஷ்டமடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:54 pm

எஸ். பாண்டியன்

விளைபயிர்களை நாசம் செய்யும் காட்டு மிருகங்களால் விவசாயிகள் நஷ்டமடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தலைமை வகித்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் சுப்பையா, நேர்முக உதவியாளர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள்-அதிகாரிகளிடையே நடந்த விவாதம் வருமாறு:

விஜயமுருகன்(மாவட்ட விவசாயிகள் சங்கம்): விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் விரைவு பட்டா மாறுதல் முகாம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டு சிறப்பாக நடந்து வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் மனுக்களை பரிசீலனை செய்யாமல் தாமதம் செய்து வருகின்றனர். எவ்வித முன்னறிவிப்பின்றி மும்முனை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து எப்போது  வரும் என காத்திருக்க வேண்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரவு நேரங்களில் மிருகங்களின் நடமாட்டம் இருக்கிறது. எனவே விவசாயிகள் பயனடையும் வகையில் பகலில் தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.

ராமசாமி(வட்டார விவசாயிகள் சங்கம்): காரியாபட்டி, அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதியில் உள்ள நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், பயறு வகைகள், வெங்காயம் பயிரிட்டுள்ள விளைநிலங்களில் காட்டுப்பன்றி, மான்கள், மயில்கள் கூட்டம் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இப்பகுதியில் 15 ஆயிரம் மாடுகள், அதிகளவிலான ஆடுகளும் உள்ளன. இதற்கான மேய்ச்சல் நிலங்கள் மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் இருந்தது. தற்போது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட காடுகள் என வனத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதை நம்பி 5 ஆயிரம் குடும்பங்கள் மேய்ச்சலுக்கு இடம் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர். இதை போக்க குறிப்பிட்ட பகுதியை மேய்ச்சலுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.    

ராமசுப்பிரமணியராஜா(மா விவசாயிகள் சங்கம்):இந்த மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட போலி உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இவைகளை வேளாண்மை துறை தடை செய்ய வேண்டும். ராஜபாளையம் புதுபேருந்து நிலையம் எதிரே கண்மாய் பகுதியில் தனியார் ஆழ்குழாய் அமைத்து நீரை எடுப்பதை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி பதில் அளித்து பேசுகையில், விவசாயிகளின் அலைச்சலை தவிர்க்கவே விரைவு பட்டா மாறுதல் நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட ஆவணங்களின் அடிப்படையில் உடனே பட்டாவும் வழங்கப்படுகிறது. இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உடனே வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  ராஜபாளையம், வத்திராயிருப்பு மேற்கு பகுதியில் உள்ள மின்மாற்றிகள் மாற்றியவுடன் மும்முனை மின்சாரம் பகலில் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

41 வகையான உரங்கள் மற்றும் 219 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளன. போலியான மருந்துகள் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 39 உரம் மாதிரிகள், 1800 லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்தும், தடை விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் கண்மாயில் ஆழ்குழாய் அமைத்துள்ள தனியார் குறித்து வட்டாட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.

அசோக்குமார்( கோட்ட வனப்பாதுகாவலர்): காட்டு விலங்குகளால் சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்படும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிக்குள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் குறிப்பிட்ட பகுதிகள் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண்மை துணை இயக்குநர் மணிசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.