வெளிமார்க்கெட்டில் உயர்ந்துவரும் அரிசி விலையை குறைக்க கிலோ 20 ரூபாய்க்கு புதிய சன்னரக அரிசி விற்பனையை தமிழக அரசு துவக்கியுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் குறுவை, சம்பா சாகுபடி வெகுவாக குறைந்தது. பெருமாள் ஏரி பாசனம் மற்றும் நிலத்தடி நீர் உள்ள பகுதிகளான விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, கடலூரில் ஒரு பகுதியில் மட்டும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.அரசு அறிவித்த சமுதாய நாற்றங்கால் கூட முழுமையாக வெற்றி பெறவில்லை. இவ்விரு போகங்களிலும் நெல் சாகுபடியில் பெரும் சரிவை சந்தித்ததால் மார்க்கெட்டில் நெல் வரத்து குறைந்தது. இதனால் நெல் விலை இரு மடங்காக உயர்ந்தது. வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு விவசாயிகள் அறுவடை செய்யும் நிலத்திற்கே சென்று வாங்கினர்.