நீலகிரியில் வறட்சி: நீரின்றி இடம்பெயரும் பறவைகள்!
நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் வடக்கு வனக்கோட்டப் பகுதிகளில் நிலவும் வறட்சியால் குடிப்பதற்கு கூட நீரின்றி பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.


நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் வடக்கு வனக்கோட்டப் பகுதிகளில் நிலவும் வறட்சியால் குடிப்பதற்கு கூட நீரின்றி பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
÷இந்தியாவில் அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பறவை வெண் முதுகு கழுகு (ரட்ண்ற்ங் தன்ம்ல்ங்க் யன்ப்ற்ன்ழ்ங்). இந்த வகை கழுகுகள் இந்தியாவில் 99 சதம் அழிந்துவிட்டன. தற்போது நீலகிரி மாவட்டத்தில் சீகூர், மாயார் பள்ளத்தாக்கு பகுதிகளில் மட்டுமே வசித்து வருகின்றன. அதிலும் நாட்டிலேயே இவற்றின் எண்ணிக்கை சுமார் 100-ல் இருந்து 120-க்குள்தான் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
÷தண்ணீர் இருக்குமிடங்களில் உள்ள மரங்களின் உச்சியில் கூடு கட்டி வனப்பகுதியில் இறக்கும் விலங்குகளை உண்டு வாழும் இந்தக் கழுகுகள்தான் "பிணந்தின்னிக் கழுகுகள்' எனவும் அழைக்கப்படுகின்றன. வட இந்தியாவில் இந்த வகை கழுகுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதால், செயற்கை முறையில் அவற்றை உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தோல்வியில் முடிந்தது. வனச்சூழலை விட்டு எக்காலத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வராத இந்தப் பறவை இனம் தற்போது உதகையில் கல்லட்டி-மசினகுடி சாலைப்பகுதியில் காணப்படுவது வன உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கழுகுகள் குறித்த ஆராய்ச்சியாளரும், உதகை அரசு கலைக்கல்லூரி விலங்கியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் துறை பேராசிரியருமான ராமகிருஷ்ணன், கழுகு ஆராய்ச்சியாளர் சாம்சன் ஆகியோர் கூறியது:
÷வெண் முதுகு கழுகு இனம் நாட்டிலேயே மிகவும் அரிய பறவை இனம். இவை ஊனுண்ணிகள் என்பதால், அதிக புரத சத்து கொண்ட மாமிச வகைகளை உண்டவுடன் அவற்றின் உடலில் ஏற்படும் சூட்டின் காரணமாக தேவையான அளவுக்கு தண்ணீரை குடிக்கும். மேலும் உடலின் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளில் குளிக்கவும் செய்யும். அதனால்தான், அந்தப் பறவை இனம் நீர்நிலைகள் அருகே கூடு கட்டுகின்றன.
÷வறட்சியின் காரணமாக சீகூர், ஜகளிக்கடவு ஆகிய நீர்நிலைகள் வறண்டுவிட்டன. மாயார் ஆற்றில் மட்டும் குறைவாக தண்ணீர் இருந்தாலும், இந்த நீர்நிலைக்கு இந்தக் கழுகுகள் வருவதில்லை. தண்ணீரைத் தேடி கல்லட்டி மலைப்பாதையிலுள்ள நீரோடைக்கு வந்து, இவை தங்கள் உடல் சூட்டை தணித்துக் கொள்கின்றன.
÷வனப்பகுதிகளையொட்டியுள்ள விவசாய நிலங்களில் இறக்கும் கால்நடைகளை ஊனுண்ணிகள் சாப்பிடாமல் இருப்பதற்காக, அவற்றின் உடல் மீது டைக்ளோபினாக் என்ற வலி நிவாரணி மருந்து ஊற்றப்படுவது வழக்கம். இந்த மருந்து ஊற்றப்பட்ட இறந்த விலங்குகளின் உடலை வெண் முதுகு கழுகுகள் உண்டால், அவற்றின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகின்றன. இதன் காரணமாகவே, இந்த வகை கழுகுகள் எண்ணிக்கை 99 சதம் குறைந்துவிட்டது. தற்போது இவை கல்லட்டி மலைப் பாதையில் காணப்படுவது ஆச்சரியமானது என்பதோடு, வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியை காட்டுவதாக அமைந்துள்ளது என்றனர்.
÷இதுதொடர்பாக சீகூர் வனச்சரகர் செல்லதுரை கூறுகையில், வெண்முதுகு கழுகு வகைகள் தற்போது கல்லட்டி மலைப்பாதையிலேயே காணப்படுவதால், இவற்றை பார்க்கும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அவற்றிற்கு எத்தகைய இடையூறும் விளைவிக்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...