கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தொழில்வளர்ச்சிக்கு ஊக்கம் தராத பட்ஜெட்: தொழில்அமைப்புகள் அதிருப்தி

தொழில்வளர்ச்சிக்கு ஊக்கம் தராத வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என்று ஈரோடு மாவட்ட தொழில்அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:38 am

ஜெபலின்ஜான்

தொழில்வளர்ச்சிக்கு ஊக்கம் தராத வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என்று ஈரோடு மாவட்ட தொழில்அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன்:

மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லை. தனிநபர் வருமான வருமான வரி, கம்பெனிகள் மீதான வரி, கலால் வரி மற்றும் சேவை வரிகளில் எவ்வித மாற்றமும் செய்யாமல், வரிகுறைப்பு செய்யாமல் இருப்பது தொழில்முனைவோர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு கடந்த நிதிநிலையைவிட, 46 சதவீதம் அதிக நிதி ஆதாரம் கொடுத்துள்ளது கிராம ஊராட்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும். 

பெண்களின் வளர்ச்சியில் பெண்களுக்காகவே தனியாக ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ரூ.1,000 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் என்பதும், பெண்களின் வளர்ச்சிக்காக தனியாக ஒரு திட்டம் ரூ.1,000 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் என்பதும் ஏற்புடையதே.

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்படும் என்பது இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தாலும், பாரத பிரதமரின் 2-வது சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் தமிழகத்தை சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது.

தனிநபர் வருமான வரி கம்பெனிகள் மீதான வரி சேவை வரி இவைகளில் வரிகுறையும் என்று எதிர்பார்த்த நிலையில், எவ்வித மாற்றமும் செய்யாமல் உபரி வரியை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தியிருப்பது தொழில்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். சிறு, குறுந்தொழில்களுக்கு கடன்கள் வழங்க ரூ.5,000 கோடி அதிகப்படுத்துவதை தவிர வட்டிக்குறைப்போ வேறு சலுகைகளோ வழங்கப்படவில்லை.  வெளிநாட்டினருக்கும், பங்குவர்த்தகத்துக்கும் வரிகள் குறைக்கப்பட்டு அன்னிய முதலீட்டை ஈர்க்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முறைசாரா வணிகம் செய்யும் 93 சதவீத சிறு, குறு வணிகர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையவில்லை. இதன் மூலம் பணவீக்கம் குறையாது.  நடப்பு கணக்கின் சதவீதமும் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஈரோடு மாவட்ட துணி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலர் எஸ்.சிவானந்தன்:

 மத்திய பட்ஜெட் ஏற்றுமதியாளருக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. கைத்தறிக்கடனுக்கான வட்டியை 6 சதவீதத்தில் வழங்குவது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் இந்த வரிச்சலுகையை விசைத்தறிக்கும் நீட்டிக்க வேண்டும்.  டப் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஜவுளிப்பூங்காவில் ஆயத்த ஆடை பூங்காக்கள் திறக்கப்படும் என்பது வரவேற்புக்குரியது. கழிவுநீரை மறுசுழற்சி செய்வதற்காக பதனிடும் ஆலைகளுக்கு ரூ.500 கோடி மட்டும்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது யானைப்பசிக்கு, சோளப்பொறி வழங்குவது போல உள்ளது. குறைந்தபட்சம் ரூ.5,000 கோடி ஒதுக்கினால்தான் கழிவுநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும்.  மத்திய, மாநில ஜவுளித்துறை அதிகாரிகள், உள்நாட்டுத்தயாரிப்பாளர்கள் சேர்ந்து குழு அமைத்து ஜவுளிப் பிரச்னைகளை தீர்க்க பரிந்துரைகளை அனுப்பினால்தான் நொடிந்துபோன ஜவுளித்துறையை மீண்டும் தழைக்க செய்ய முடியும்.

தமிழ்நாடு கட்டடப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஆர்.மோகன்ராஜ்:

 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளை ஒருங்கிணைக்க தனி வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. இதன் மூலம் நிலஎடுப்புப் பணிகள், சாலை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்த முடியும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள தனியார் முதலீட்டை திரட்ட கூடுதல் முயற்சி எடுக்கப்படும் என அறிவித்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் கட்டுமானத்துறையில் சவாலாக விளங்கும் கட்டுமானக் கம்பி விலையை கட்டுப்படுத்த எவ்வித அறிவிப்பும் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது. வரியை குறைத்திருந்தால் கட்டுமானக் கம்பிகளின் விலை குறைந்திருக்கும். வீட்டுக்கடன் பெறுவோர்களுக்கு கூடுதலாக ரூ.2.5 லட்சம் வரை வரிவிலக்கு அளித்திருப்பது வரவேற்புக்குரியது.  காற்றாலை மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தியுடன் இணைந்த மானியம் வழங்க ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளது வரவேற்க்கத்தக்கது.

இந்திய விசைத்தறி சம்மேளனத் தலைவர் எம்.எஸ்.மதிவாணன்:

 வெளிநாடுகளில் இருந்து தாராளமாக துணிகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்காதது வரவேற்புக்குரியது. டப் திட்டம் நீட்டிக்கப்பட்டு, இந்த ஆண்டு இத்திட்டத்துக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது. கைத்தறிகளுக்கு 6 சதவீத வட்டியில் கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது வரவேற்புக்குரியது. இத்திட்டத்தை விசைத்தறிக்கும் நீட்டிக்க வேண்டும். அமைப்புசாரா தொழில்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு திட்டத்தில் விசைத்தறியையும் சேர்க்க வேண்டும். மின்உற்பத்தித்திட்டங்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது வரவேற்புக்குரியது. வருமானவரி கட்டுவோர்களுக்கு எவ்வித சலுகைகளையும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய திட்டங்கள் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது.

ஈரோடு துணி வணிகர்கள் சங்கச் செயலர் சி.பி.குணசேகரன்:

  ஜவுளித்துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 12-வது ஐந்தாண்டு திட்டம் முடியும் வரை ரூ.1.51 லட்சம் கோடி நிதி ஆதாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. புதிய ஜவுளிப் பூங்காக்கள் தொடங்க ரூ.50 கோடி ஒதுக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.