கொங்கு மண்டல கிராமங்களில் மழைக்கஞ்சி வழிபாடு!
கடும் வறட்சியைப் போக்க வான்மழை கைகொடுக்க வேண்டும் என்பதற்காக, கொங்கு மண்டல கிராமங்களில் மழைக்கஞ்சி வழிபாடு செய்யும் நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.


கடும் வறட்சியைப் போக்க வான்மழை கைகொடுக்க வேண்டும் என்பதற்காக, கொங்கு மண்டல கிராமங்களில் மழைக்கஞ்சி வழிபாடு செய்யும் நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியும், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப்பெரிய வறட்சியும் ஏற்பட்டு வருகிறது என்பதை வரலாறு கூறுகிறது. நீலகிரி மாவட்டத்தின் நீர்வளம் தான், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீராகவும், ஈரோடு மாவட்ட விளைநிலங்களுக்கு பாசன நீராகவும், குடிநீராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் கொங்கு மண்டலத்தில் உள்ள அணைகள், ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகள், கோவை மாவட்டத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு, திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் கவலை தரும் நிலையில் உள்ளது.
கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடாததால், தமிழகத்தில் 70 சதவீத மக்களுக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்றிலும் தண்ணீர் இல்லை. இதனால், கொங்கு மண்டலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.
மழைக்கஞ்சி வழிபாடு:
இதன் காரணமாக, வருண பகவான் கைகொடுக்க வேண்டும் என்பதற்காக, கொங்கு மண்டல கிராமங்களில் பாரம்பரிய வழிபாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மழைக்கஞ்சி வழிபாடுகள் பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அரச்சலூரைச் சேர்ந்த செல்லம்மாள் (84) கூறியது:
மழைக்கஞ்சி வழிபாட்டுக்காக ஒவ்வொரு வீடாகச் சென்று பெரிய பானையில் பழைய சோறு வாங்கி வருகின்றனர். பின்னர் கிராமப் பெண்கள் ஒன்றுகூடி, ஊரைவிட்டு போவதாகக் கூறி ஒப்பாரி பாட்டு பாடுகின்றனர். இந்தப் பாட்டு கிராமத்துக்கு கிராமம் சூழ்நிலையை பொறுத்து வேறுபடுகிறது.
ஒப்பாரி பாட்டு முடித்துக்கொண்டு இரவு நேரத்தில் பெண்கள் ஊரைவிட்டு கிளம்பிச் செல்வார்கள். அப்போது ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களிடம் சமாதானம் சொல்லி அழைத்து வர முற்படுவார்கள். இதையடுத்து பெண்கள் நம்பிக்கையில் திரும்பி வருவார்கள்.
பின்னர் பெரிய பானையில் இருக்கும் பழைய சோறை கரைத்து அனைவருக்கும் கஞ்சி ஊற்றுவார்கள். இதை அனைவரும் உண்டு பசியை ஆற்றிக் கொள்வார்கள். மழை விரைவில் பெய்யும் என்ற நம்பிக்கையில் அவரவர் வீட்டுக்குச் செல்வார்கள். இந்த நம்பிக்கை பொய்த்து போகாமல் சில நேரங்களில் மழை பெய்வதும் உண்டு என்றார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி அருகே கண்ணுடையாம்பாளையத்தைச் சேர்ந்த சின்னம்மாள் (75) கூறுகையில், கடந்த வாரம் மழை வேண்டி 5 நாள்களாக மாலை 7 மணியளவில் ஊர் முழுவதும் வீடு, வீடாகச் சென்று சோறு வாங்கி வந்து கண்ணுடையாம்பாளையம் விநாயகர் கோவிலில் கூழ் காய்ச்சி, மாரியம்மன் மற்றும் விநாயகருக்கு படைத்து அனைவருக்கும் வழங்கினோம்.
பின்னர் மழையில்லாத இந்த ஊரில் நாங்கள் எப்படி உயிர் வாழ்வது என்று ஒப்பாரி வைத்து அழுது, பின்னர் ஊர் எல்லைக்குச் சென்றோம். பின்னர் ஆண்கள் வந்து சமாதானம் கூறி அழைத்து வந்தனர். இந்த வழிபாடு முடித்த ஓரிரு நாள்களில் லேசான மழை பெய்தது என்றார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (75) கூறுகையில்: ஒரு சில நேரங்களில் ஊரில் இருக்கக் கூடிய பழைய கல் செக்கு, உரல், முறம், கூடை உள்ளிட்ட பழைய பொருள்களை ஊர் எல்லையில் கொட்டிவிட்டு வருவார்கள். அப்படி கொட்டிவிட்டு வந்தால் உடனே மழை பெய்யும் என்பது ஐதீகம் என்றார்.
கொங்கு மண்டலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்கே வருண பகவான் கைகொடுத்தால் தான் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...