முதல் நாளே சர்ச்சை! கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்குத் தடை? காங்கிரஸ் கண்டனம்
பதவியேற்ற சில மணிநேரங்களில் கேரள மக்கள் மாளிகையில் அசைவ உணவு சமைக்கக் கூடாது என புதிய ஆளுநர் அறிவுறுத்தியதாக வெளியான செய்திகளுக்கு காங்கிரஸ் கண்டனம்...

கேரளத்தின் புதிய ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர் - எக்ஸ்
கேரளத்தில் பதவியேற்ற சில மணிநேரங்களில் புதிய ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர் மக்கள் மாளிகையில் அசைவ உணவுகள் சமைக்கக் கூடாது என அறிவுறுத்தியதாகச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்துர் இன்று (அக். 23) பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில், கேரள முதல்வர் வி.டி. சதீசன், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், ஆளுநரின் மக்கள் மாளிகையின் சமையலறையில் மீன் மற்றும் இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் சமைக்கப்படக் கூடாது என புதிய ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கேரளத்தின் சமூக மற்றும் கலாசார பாரம்பரியங்களை புரிந்துகொள்ளாமல் ஆளுநர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, மக்களின் உணவு சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் எனக் கூறி காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மக்களின் அன்றாட வாழ்வில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் கலந்த பன்முக உணவுப் பண்பாடு நிலவுவதாகவும், மீன்வளம் பெற்ற கடலோர மாநிலமான கேரளத்தில் மீன்கள் மற்றும் பிற அசைவ உணவுகள் சாப்பிடப்படுவது ஒரு நீண்டகால பாரம்பரியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“மலையாளிகளின் உணவுப் பழக்கங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவர்கள் என்ன சாப்பிட வேண்டுமென கட்டளையிடுவதற்கோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது. உணவு சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அந்த சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து கேரளத்தின் ஆளுநர் பின்வாங்க வேண்டும்.
ஆளுநர் அவரது சைவ உணவு முறையைக் கடைபிடிக்க முழு சுதந்திரம் உண்டு. ஆனால், கேரளத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் உணவளித்து வரும் மக்கள் மாளிகையின் சமையலறையில் அவருடைய தனிப்பட்ட விருப்பத்துக்கு ஏற்ப சமைக்க வேண்டுமென வலியுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.
Summary
The Congress party has condemned the new Governor of Kerala, Om Prakash Mathur, for advising that non-vegetarian food should not be cooked in the lok bhavan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


