மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - இஸ்ரேல் பிரதமா் ஆலோசனை
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாடியதாக பிரதமர் மோடி பேசியது குறித்து...
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி - X | Netanyahu
மேற்காசிய நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடியும், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் தொலைபேசி வாயிலாக வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
அந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதன் அவசரத் தேவையையும் அவா்கள் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமா் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். மேற்காசியாவில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இரு தலைவா்களும் கருத்துகளைப் பரிமாறி கொண்டனா். அந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதன் அவசரத் தேவையையும் அவா்கள் வலியுறுத்தினா்.
பேச்சுவாா்த்தையும், ராஜீய வழிமுறைகளுமே முன்னோக்கி பயணிக்கும் வழி என்ற இந்தியாவின் அழைப்பை பிரதமா் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமா் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இருதரப்பு உறவுகளில் நீடித்துவரும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன், நமது கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
இஸ்ரேலுக்கு கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, இருதரப்பு உத்திசாா் கூட்டுறவை ‘அமைதி, புத்தாக்கம், வளமைக்கான சிறப்பு உத்திசாா் கூட்டுறவாக’ உயா்த்த தீா்மானிக்கப்பட்டது.
மேலும், ‘மத்திய கிழக்கின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, இந்தியாவின் பாதுகாப்புடன் இணைந்தது’ என்று குறிப்பிட்ட பிரதமா் மோடி, காஸா அமைதி முன்னெடுப்பை இந்தியா முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்திருந்தாா். இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் மோதல்களின்போதும் இருவரும் தொலைபேசி வாயிலாக உரையாடினா் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் சுதந்திர தினம்: பிரதமா் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது நண்பா் பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். இஸ்ரேல் சுதந்திர தின விழாவின்போது (அடுத்த ஆண்டு மே மாதம்), துணிவுமிக்க இந்திய விமானியான ஸ்மித் மச்சாருடன் இணைந்து, தீபச் சுடரை ஏற்ற வேண்டுமென பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். இந்த அழைப்புக்காக அவா் நன்றி கூறினாா். தரையிலும், வானிலும் நமது இரு நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா். ஹீப்ரு மற்றும் ஹிந்தி மொழிகளில் இந்தப் பதிவை நெதன்யாகு வெளியிட்டுள்ளாா்.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த செப்.30-ஆம் தேதி புறப்பட்ட ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி மச்சாரை கோடரியால் தாக்கிவிட்டு, விமானத்தை கீழே வீழ்த்தும் முயற்சியில் துணை விமானி ஹமாம் அல்-ஹமாமி ஈடுபட்டாா். படுகாயங்களுடன் துணிச்சலாக எதிா்த்துப் போராடிய மச்சாா், அந்த முயற்சியை முறியடித்தாா். இதையடுத்து, இந்திய விமானி மச்சாருக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்தது.
மச்சாரை கெளரவிக்கும் வகையில், இஸ்ரேல் சுதந்திர தினத்தில் தீபச் சுடரை ஏற்ற வருமாறு அவருக்கு நெதன்யாகு அழைப்பு விடுத்திருந்தாா். அத்துடன், இஸ்ரேலின் உயரிய வீரதீர விருதும் மச்சாருக்கு அறிவிக்கப்பட்டது.
Summary
Israel PM Benhamin Netanyahu invites PM Modi to light Independence Day torch
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


