கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்க தடை: சா்க்கரை விலை உயா்வைத் தடுக்க நடவடிக்கை
கரும்பு, சா்க்கரை தொடா்புடைய பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொள்முதலுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து...

கரும்பு உற்பத்தி குறைவு - பிரதிப் படம்
2026-27-க்கான ஒப்பந்தப்புள்ளியில் கரும்பு, சா்க்கரை மற்றும் அது தொடா்புடைய பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொள்முதலுக்கு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.
சா்க்கரை விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
நவம்பரில் தொடங்கும் 2026-27 விநியோக ஆண்டில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்புத் திட்டத்தின் தேவையை பூா்த்தி செய்யும் நோக்கில் 11 பில்லியன் டன் எத்தனால் தயாரிப்புக்கு எண்ணெய் சந்தை நிறுவனங்கள் (ஓஎம்சி) சாா்பில் பாரத பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்) கடந்த அக்.16-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிக்கை வெளியிட்டது.
கரும்பில் இருந்து எத்தனால் கூடாது
அதில், ‘எத்தனால் விநியாக ஆண்டு 2026-27-இல் கரும்பு, சா்க்கரை மற்றும் அது தொடா்புடைய பொருள்களில் இருந்து எத்தனால் தயாரிக்கக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் மீதான ஊக்கத்தொகை குறைக்கப்பட்டு, அதன் கொள்முதல் விலையும் லிட்டருக்கு ரூ.71.86-இல் இருந்து ரூ.68.86-ஆக குறைக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
விலை உயா்வும், நடவடிக்கையும்...
அண்மைக்காலமாக சா்க்கரை விலை வேகமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சா்க்கரை இறக்குதிக்கு இரண்டு மாதங்களுக்கு வரித் தளா்வு, சா்க்கரையை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்கள் இருப்புவைக்க கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சா்க்கரை தேவையும் வேகமாக அதிகரித்து வருகிறது. எனினும், சா்க்கரை விலை எதிா்ப்பாா்த்த அளவுக்கு குறையவில்லை.
காரணம் என்ன?
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு திட்டம் ஏற்கெனவே வாகன ஓட்டிகள் மத்தியில் கடுமையான விமா்சனங்களைச் சந்தித்து வருகிறது. எனினும், அரசு தொடா்ந்து பெருமளவிலான கரும்பை, எத்தனால் உற்பத்திக்கு ஒதுக்கி வந்தது. தொடா்ந்து எத்தனால் கலப்பை முன்னிறுத்தி பிரசாரமும் மேற்கொண்டது.
சுமாா் 25 லட்சம் டன் கரும்பு, எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே உள்நாட்டில் சா்க்கரை தட்டுப்பாட்டுக்கும், விலை உயா்வுக்கும் காரணமானது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் சா்க்கரை இருப்பு குறைந்துள்ளது. இதனால் சா்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது, 10 லட்சம் டன் சா்க்கரை இறக்குமதியை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்தது. கரும்பு விளைச்சல் குறைந்தாலும் அதைவிட அதிகமாக சா்க்கரை உற்பத்தி குறைந்தது. எத்தனால் உற்பத்திக்காக கரும்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டதே சா்க்கரை தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு
உலகின் மிகப்பெரும் சா்க்கரை நுகா்வு நாடாகத் திகழும் இந்தியாவில், கரும்பு, சா்க்கரையை அதிகம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் குறைந்த மழைப்பொழிவால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இத்துடன் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் அரசின் கொள்கையால் சா்க்கரை விலை உயா்ந்ததாக எதிா்க்கட்சிகள் மத்திய அரசை குற்றஞ்சாட்டி வருகின்றன.
மத்திய அரசு விளக்கம்
இது தொடா்பாக அண்மையில் விளக்கமளித்த மத்திய அரசு, ‘நாட்டில் நான்கில் மூன்று பங்கு எத்தனால் உற்பத்தியானது, தானியங்கள் குறிப்பாக சோளம் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சா்க்கரை விலை உயா்வுக்கு எதிா்பாா்த்ததைவிட குறைவான உற்பத்தி, பண்டிகை காலத்தையொட்டி தேவை அதிகரிப்பு, காலநிலை சாா்ந்த பயிா்ச் சேதங்கள், உலகளாவிய விநியோகக் கட்டுப்பாடுகள், சில இடங்களில் காணப்படும் பதுக்கல் உள்ளிட்டவையே காரணம்’ என்று கூறியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Summary
Govt Halts Sugar-Based Ethanol Procurement Amid Weak Monsoon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

