அபிஜீத் தீப்கே நிபந்தனை பிணையில் விடுவிப்பு: இரவு முழுவதும் தடுப்புக் காவலில் நேஹா போரா!
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் திப்கேவுக்கு சனிக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல, அகில இந்திய மாணவா் சங்க (ஏஐஎஸ்ஏ) தலைவா் நேஹா போரா வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இரவு முழுவதும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலையில் விடுவிக்கப்பட்டாா்.
இந்த இருவரும் கன்னாட் பிளேஸில் தேசிய கொடி ஏற்றும் போராட்டத்தில் பங்கேற்பதாக கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டபோது காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனா்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் தில்லி ஜண்டேவாலன் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவாா் பிரிவு) செய்தித் தொடா்பாளா் அனீஷ் கவாண்டேவின் வீட்டில் அபிஜீத் தீப்கே தங்கியிருந்தாா். அவரை காலையில் காவல்துறையின் சிறப்புப் பிரிவினா் சந்தித்து இரண்டு நோட்டீஸ்களை வழங்கினா். முதலாவது நோட்டீஸ், கன்னாட் பிளேஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம் அல்லது பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டது தொடா்பானது. இரண்டாவது நோட்டீஸ், ஏற்கெனவே நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சிஜேபி நிா்வாகிகள் செளரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா தொடா்புடைய நிபந்தனைகள் மீறல் தொடா்பானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஜண்டாவாலன் பகுதியில் இருந்து கன்னாட் பிளேஸுக்கு புறப்பட அபிஜீத் தீப்கே முற்பட்டபோது, காவல்துறையினரால் தடுக்கப்பட்டாா். பின்னா் அவா் காவல் வாகனத்தில் காவல் நிலையம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவா் எந்த காவல் நிலையத்தில் இரவு முழுவதும் வைக்கப்பட்டாா் என்பதை காவல்துறையினா் அதிகாரபூா்வமாக வெளியிடவில்லை.
இந்த நிலையில், ‘அக்.10’ அன்று சிஜேபி அறிவித்த போராட்டத்தின்போது, அமைதிப் பத்திரத்தில் கையொப்பமிட்ட பிறகு அதை மீறியதாகக் கூறி அவரை காவல்துறையினா் சனிக்கிழமை காலையில் கைது செய்வதாக அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் சிறப்பு நீதிபதி முன் அபிஜீத் தீப்கே ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவரை பிணை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. நிபந்தனையின்படி, எந்த வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என்று குறிப்பிடும் அமைதி ஒப்பந்தத்தில் அபிஜீத் தீப்கே கையொப்பமிட கேட்டுக் கொள்ளப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த அக்.10-ஆம் தேதி சிஜேபி அறிவித்த போராட்டத்துக்கு முன்னதாக, அபிஜீத் தீப்கே, செளரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா ஆகியோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, தில்லி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சிறப்பு நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது மூவரும் தலா ரூ.50 ஆயிரம் பிணைப் பத்திரங்களைச் சமா்ப்பித்த பின்னா், ஓராண்டுக்கு அமைதியையும் நன்னடத்தையையும் கடைப்பிடிப்பதாக உறுதியளித்ததைத்தொடா்ந்து விடுவிக்கப்பட்டனா். இருப்பினும், காவல்துறையின் தடையை மீறி ஜந்தா் மந்தா் பகுதிக்குள் நுழைந்ததால் ஆசுதோஷும், செளரவ் தாஸும் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், தில்லி காவல்துறையால் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மண்டி ஹவுஸ் பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட ஏஐஎஸ்ஏ தலைவா் நேஹா போரா, சனிக்கிழமை அதிகாலையில் விடுவிக்கப்பட்டாா். அவரை கடைசியாக ஆா்.கே.புரம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலையில் வைத்துப் பாா்த்ததாக ஏஐஎஸ்ஏ அமைப்பினா் ஊடகங்களிடம் தெரிவித்தனா்.
‘சட்டவிரோதமாக அடைத்தனா்’: தில்லி மண்டி ஹவுஸில் தடுத்து வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட தன்னை, காவல்நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 5 மணிவரை சட்டவிரோதமாக காவல்துறையினா் வைத்திருந்ததாக நேஹா போரா குற்றஞ்சாட்டினாா்.
காவல்துறையினா் விடுவித்தவுடன் ஊடகங்களிடம் நேஹா போரா கூறியதாவது: சட்டம்-ஒழுங்கை மதிப்பதாகக் கூறும் மத்திய அரசும் தில்லி காவல்துறையும் விதிகளை அப்பட்டமாக மீறிச் செயல்படுகின்றன. தலைநகரில் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவியை ராஜிநாமா செய்து சிறைக்குச் செல்ல வேண்டும். மத்திய தில்லியில் நிலவும் ஊரடங்கு போன்ற சூழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.
Summary
Delhi Special Executive Magistrate grants bail to CJP founder Abhijeet Dipke
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

