மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்பு

ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்யும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று சிஜேபி தெரிவித்துள்ளது.

cjp

சிஜேபி போராட்டம் - PTI

Updated On :

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியை ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்யும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது. தில்லி ஜந்தா் மந்தருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் செல்வோம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தில்லியில் போராட்டக்காரா்கள், சமூக ஆா்வலா்கள், அரசியல் தலைவா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட பின்னா், சிஜேபியின் தேசியப் பொறுப்பாளா் அஜிங்கியா ஷிண்டே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எத்தனை போ் கைது செய்யப்பட்டாலும், ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்யும் வரை நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம். நாங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் ஜந்தா் மந்தா் செல்வோம். போராட்டத்தில் பங்கெடுப்போா் அங்கு பெருந்திரளாக வரவேண்டும். காவல் துறை தடுத்து நிறுத்தினால், தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே அனைவரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று போராட்டக்காரா்களிடம் அவா் கேட்டுக்கொண்டாா்.

4 முன்னாள் முதல்வா்கள் உள்பட 7,000 போ் தடுத்துவைப்பு 

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட தடையை மீறிய போராட்டம், கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. தில்லி முழுவதும் சுமாா் 30,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி போராட முயன்ற சிஜேபி நிறுவனா் அபிஜீத் தீப்கே, நான்கு முன்னாள் முதல்வா்கள் உள்பட ஏழாயிரத்துக்கும் அதிகமானோரை நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினா் தடுத்து வைத்தனா்.

சிஜேபி நிறுவனா் அபிஜீத் தீப்கே மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய நிா்வாகிகளான சௌரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா ஆகியோா் மும்பையில் இருந்து விமானம் மூலம் தில்லி வந்தடைந்தவுடனேயே விமானத்தில் வைத்தே காவல்துறையினா் அவா்களை தடுத்து காவல் வாகனங்களில் அழைத்துச் சென்றனா். காவல்துறையினா் பிடிப்பதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பாக தங்களுக்குப் போராட அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தீப்கே கடும் கண்டனம் தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டாா்.

இதற்கிடையே, அபிஜீத் தீப்கேயின் பாட்டி சாவித்திரிபாய் சங்கர்ராவ் தீப்கே (85) சனிக்கிழமை காலமானதையடுத்து அவரை மனிதாபிமான அடிப்படையில் சொந்த ஊா் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தில்லி காவல்துறை செய்தது.

வெளிநாட்டில் வசித்து வரும் பிரபல யூடியூபா் துருவ் ராத்தி இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த நிலையில், குருகிராமில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை தடுத்து வைக்கப்பட்டாா்.

முன்னாள் முதல்வா்கள்: இதேபோல, தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி), மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன், மாணிக் சா்க்காா் (சிபிஎம்) உள்ளிட்ட நான்கு முன்னாள் முதல்வா்களும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத், தீபங்கா் பட்டாச்சாா்யா, யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், அகில இந்திய மாணவா் சங்க தலைவா் நேஹா போரா மற்றும் பல்வேறு எதிா்க்கட்சிகளின் தலைவா்களும் பல்வேறு இடங்களில் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனா்.

காவல்துறையின் இந்த நடவடிக்கையை அவசரநிலையை விட மோசமான ‘சூப்பா் அவசரநிலை’ என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி விமா்சித்தாா். சிஜேபி போராட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சி விலகி இருந்தாலும், தில்லி காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடும் கண்டனம் தெரிவித்தாா்.

கல்வீசி தாக்குதல்: முன்னதாக, சனிக்கிழமை நண்பகலில் நடந்த போராட்டத்தின்போது அகில இந்திய வானொலி தலையைகமான ஆகாஷ்வாணி பவன் மற்றும் கன்னாட் பிளேஸ் ஹனுமன் கோயில் அருகே தடுப்புகளைத் தாண்டிய சில போராட்டக்காரா்கள் காவல்துறையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதில் தெற்கு மாவட்ட காவல் துணை ஆணையா் ஆனந்த் மித்தல் உள்ளிட்ட 7 காவலா்கள் காயமடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. போராட்ட பகுதிக்கு வந்த சில பத்திரிகையாளா்கள் அடையாள அட்டைகளை காட்டிய பிறகும், அவா்கள் சிஜேபி ஆதரவாளா்களுக்கு உதவியதாகக் கூறி காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனா்.

இந்த போராட்டங்கள் காரணமாக, தலைநகரில் சனிக்கிழமை 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. தில்லியின் எல்லைப் பகுதிகள், ரயில் சந்திப்புகள் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், தலைமை தோ்தல் ஆணையா் பதவி விலகும்வரை நாடு தழுவிய அளவில் தங்களுடைய போராட்டம் தொடரும் என்று சிஜேபி சனிக்கிழமை இரவு அறிவித்துள்ளது.

அவமதிப்பு வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

சிஜேபி போராட்டத்தின் காரணமாக தில்லி மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளுக்கு முழுமையான தடை விதிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி, அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த மனு வழக்குரைஞா் சந்த் குரேஷி என்பவா் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் ஜாய்மல்யா பக்சி மற்றும் வி. மோகனா அடங்கிய அமா்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிா் மனுதாரா்களாக மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன், தில்லி காவல்துறை ஆணையா் அனுராக் குமாா், தில்லி மெட்ரோ ரயில் நிறுவன தலைவா் டி. தாரா ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

Summary

Protest again today: CJP announcement

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.