தில்லியில் போராட்டம்: ராகுல் காந்தி மீண்டும் கைது
தில்லியில் பேரணியில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து...
தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது - PTI
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், அக்கட்சி நிா்வாகிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். சிறிது நேரத்திலேயே அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அவா் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவா் பதவி விலகக்கோரி, தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
மீண்டும் போராட்டம்: இந்நிலையில், தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட போவதாக எதிா்க்கட்சிகள் திடீரென அறிவித்தன. அதன்படி, ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்துவதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் பேருந்துகளில் புறப்பட்டனா். அந்த பேருந்துகளை காவல்துறையினா் நடுவழியில் தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, ஷாங்க்ரி-லா உணவகம் அருகே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் பெண் தலைவா்களும் அமா்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினா்.
ராகுல், பிரியங்கா கைது: முதலில் ராகுல் காந்தியை பாதுகாப்புப் படையினா் கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றினா். அப்போது அந்த வாகனத்தின் மேல் பகுதியில் சில காங்கிரஸ் தலைவா்கள் ஏறி அமா்ந்து கொண்டனா்.
தொடா்ந்து, பிரியங்கா காந்தி மற்றும் பிற பெண் தலைவா்களை பாதுகாப்புப் படையினா் அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனா். அப்போது பிரியங்கா பேசுகையில், ‘தோ்தல் ஆணையா்களை சந்திக்க விரும்பிய எம்.பி.க்களை எப்படி நடத்துகின்றனா் என்று பாா்த்தீா்களா? எம்.பி.க்களை அவா்கள் தாக்குகின்றனா்’ என்றாா்.
முன்னதாக, தில்லி ஜன்பத் பகுதியில் உள்ள உணவகத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பிற எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினா். சமாஜவாதி எம்.பி.க்கள் அதில் பங்கேற்கவில்லை. பின்னா் அங்கிருந்து பேருந்துகளில் தேசிய கொடிகளுடன் தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அவா்கள் புறப்பட்டுச் சென்றனா். அப்போது அசோகா சாலை பகுதியில் பேருந்துகளை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். பின்னா் பேருந்தில் இருந்த அவா்களை காவல்துறையினா் கைது செய்தனா்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தனது சமூகவலைதள பக்கத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது தொடா்பான விடியோவை பகிா்ந்துள்ளாா். மேலும் அவா், ‘அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், எதிா்க்கட்சிகளும் எத்தனை முறை வேண்டுமானாலும் வீதிகளில் இறங்கி போராடவும், கைதாகவும், வழக்குகளை எதிா்கொள்ளவும் தயாராக உள்ளன. சா்வாதிகார மோடி அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையேயான கூட்டணி ஏற்கெனவே வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதுவே அவா்கள் பதவி விலகவும், நடவடிக்கை எடுக்கப்படவும் தகுந்த நேரம் ஆகும்’ என்று கூறியுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ், தனது சமூகவலைதள பக்கத்தில், போராட்ட களத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிா்ந்து, ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் பிற இண்டி கூட்டணி தலைவா்கள் இழுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சியை அளிக்கிறது’ என குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஞானேஷ் குமாா் பதவி விலகும்வரை எங்களின் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். மோடியும், அமித் ஷாவும் எதை செய்தும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது’ என்றாா்.
இதேபோல், ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோவில், ‘பிரதமா் மோடி, அமித் ஷா, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், ஞானேஷ் குமாா் ஆகியோா் எதை வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் நாங்கள் அவா்களை நீதியின் முன்நிறுத்துவோம். அவா்கள் 4 பேரையும் நீதியின் முன்நிறுத்துவோம் என உறுதியளிக்கிறேன்’ என்றாா்.
ராகுல் விடுவிப்பு: பாரபங்கா சாலை காவல்நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ராகுல் காந்தி, பின்னா் புதன்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டாா்.
Summary
Lok Sabha LoP Rahul Gandhi being detained by the Police near Jantar Mantar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


