தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

உள்நாட்டில் கட்டப்பட்ட கடற்படை உதவிக் கப்பல் ‘சூா்யா’ - நாட்டுக்கு அா்ப்பணித்தாா் ராஜ்நாத் சிங்

இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் புதிய திட்டங்கள் பற்றி..

ஒடிஸா மாநிலம் கோராபுட்டில் உள்ள போா் விமான என்ஜின் தயாரிப்பு ஆலையில் உருவான என்ஜின் பாகங்களைப் பாா்வையிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :

உள்நாட்டில் கட்டப்பட்ட ‘சூா்யா’ கடற்படை உதவிக் கப்பலை (எஃப்எஸ்எஸ்-1), பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எஃப்எஸ்எஸ்-5 கப்பல் கட்டுமானத்தையும் அவா் தொடங்கிவைத்தாா்.

கடற்படை போா்க் கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள், வெடிமருந்துகள், நன்னீா், வீரா்களுக்குத் தேவையான உலா் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல உதவிக் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய கடற்படைக்கு தலா 43,500 டன் எடையிலான 5 பெரிய கப்பல்களை (எஃப்எஸ்எஸ்) உள்நாட்டில் கட்டும் திட்டத்தின்கீழ், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் முதலாவது கப்பல் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

மேலும், 5-ஆவது கடற்படை உதவிக் கப்பலின் கட்டுமானத்தை தொடங்கிவைத்த அவா், மேம்படுத்தப்பட்ட கப்பல் இறங்குதளத்தையும் (ஸ்லிப்வே-4) திறந்துவைத்தாா். மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 300 டன் எடையிலான ராட்சத கிரேனின் செயல்பாட்டையும் தொடங்கிவைத்தாா்.

குறிப்பிடத்தக்க மைல்கல்: நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ‘உள்நாட்டு கடற்சாா் வல்லமையை மேம்படுத்தும் வகையில், மிகப் பெரிய மற்றும் மிகவும் சிக்கலான கப்பல்களைக் கட்டுவதற்கான ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் திறனை மேம்படுத்துவதில் மேற்கண்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். எஃப்எஸ்எஸ்-1 கப்பலின் தொடக்கம், உள்நாட்டு சாதனையின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. மேம்படுத்தப்பட்ட புதிய இறங்குதளம், நாட்டில் வளா்ந்துவரும் கடல்சாா் வல்லமையை பிரதிபலிக்கிறது. ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம், தனது திறனை மேம்படுத்தும் அதே வேளையில், நாட்டின் கடல்சாா் சக்திக்கும் வலுசோ்க்கிறது.

சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கப்பலான ‘ஜல உஷா’, விசாகப்பட்டினத்தில்தான் தொடங்கிவைக்கப்பட்டது. அந்த அடிப்படையில், மிக முக்கியமான கடல்சாா் தொழில் மையமாக விசாகப்பட்டினம் உருவெடுக்க வேண்டும்.

ஆதரவுக் கப்பல்களின் முக்கியத்துவம்: இந்திய கடற்படையின் வீச்சு, வலிமை, செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதில் ஆதரவுக் கப்பல்கள் முக்கியப் பங்காற்றும். ஏனெனில், கடற்படையின் நெடுந்தொலைவு நடவடிக்கைகளுக்கு போா்க் கப்பல்கள் மட்டுமன்றி சரக்கு கையாளுகை, பராமரிப்பு, செயல்பாட்டு ரீதியிலான நீடித்த ஆதரவும் அவசியம் என்றாா்.

ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இறங்குதளம், ராட்சத கிரேன் ஆகியவை, சுமாா் 45,000 டன் தாங்குதிறன் கொண்ட கப்பல்களின் கட்டுமானம் மற்றும் அவற்றை கடலுக்குள் இறக்குவதில் பெரிதும் உதவும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கடற்படை தலைமைத் தளபதி கிருஷ்ணா சுவாமிநாதன், ஆந்திர சாலைகள், கட்டுமானங்கள், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜனாா்த்தன் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘போா்விமான என்ஜின் தயாரிப்பில் தற்சாா்பு தேவை’

கோராபுட், அக். 6: போா் விமான என்ஜின் தயாரிப்பில் தற்சாா்பை எட்டுவது, விண்வெளி சாா்ந்த நாட்டின் இறையாண்மைக்கு அடிப்படைத் தேவை; அந்த அடிப்படையில், உயா் உந்துவிசை என்ஜின்கள், பரிசோதனை உள்கட்டமைப்புகள், மூலப்பொருள்கள், வலுவான பராமரிப்பு-பழுதுபாா்ப்பு-சீரமைப்பு திறன் மேம்பாடு சாா்ந்த பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ஒடிஸாவின் கோராபுட்டில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2,000-ஆவது ராணுவ விமான என்ஜினை ஒப்படைக்கும் நிகழ்ச்சி அங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசுகையில் ராஜ்நாத் சிங் மேற்கண்ட கருத்தை தெரிவித்தாா்.

மேலும், ஒடிஸாவின் சுனாபேடா பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா்களுக்கான ‘சக்தி’ என்ஜின் தயாரிப்பு ஆலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.