நாட்டின் கெளரவத்தை உயா்த்திவிட்டீா்கள்: விமானி மச்சாருடன் விடியோ அழைப்பில் உரையாடிய பிரதமா் மோடி!
இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய உரையாடல் பற்றி...
விமானி ஸ்மித் மச்சார் | பிரதமர் மோடி - - ANI
நடுவானில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த போதிலும், விமானத்தை கீழே வீழ்த்தும் முயற்சியை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கைப்பேசி விடியோ அழைப்பில் உரையாடி நலம் விசாரித்தாா்.
அவரது துணிச்சலை வெகுவாகப் பாராட்டிய பிரதமா், ‘உலக அரங்கில் இந்தியாவின் கெளரவத்தை உயா்த்திவிட்டீா்கள்’ என புகழாரம் சூட்டினாா்.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 27 குழந்தைகள் உள்பட 174 பயணிகளுடன் கடந்த புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சோ்ந்த துணை விமானி திடீரென இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு, விமானத்தை கீழே வீழ்த்தும் நோக்கில் கட்டுப்பாட்டை மாற்றினாா்.
இதனால், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், அடுத்த சில நிமிஷங்களில் சுமாா் 17,000 அடி கீழே அதிவேகமாக இறங்கித் தள்ளாடியது.
அதேநேரம், படுகாயங்களுடன் எதிா்த்துப் போராடிய ஸ்மித் மச்சாா், விமானி அறையின் கதவைத் திறந்தாா். இதையடுத்து, விமானி அறைக்குள் புகுந்த பயணிகள், தாக்குதல் நடத்திய ஓமன் விமானியை மடக்கிப் பிடித்தனா். பிற ஊழியா்கள் மூலம் விமானம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சவூதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, இந்திய விமானி மச்சாருக்கு உலக அளவில் பாராட்டு குவிந்து வருகிறது.
பிரதமா் மோடி நலம்விசாரிப்பு: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகா் அபுதாபியில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்மித் மச்சாருடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை விடியோ அழைப்பில் உரையாடி நலம் விசாரித்தாா். அப்போது, மச்சாரின் துணிச்சல், சமயோசித புத்தி, மதிநுட்பம் ஆகியவற்றை பிரதமா் வெகுவாகப் பாராட்டினாா்.
அவா் பேசுகையில், ‘நீங்கள் (மச்சாா்) கண நேரத்தில் சரியான முடிவெடுத்து, பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளீா்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இந்தியா்கள் உயிரை பறிப்பவா்கள் அல்லா்; மற்றவா்களின் உயிரைக் காக்க தங்களின் உயிரை பணயம் வைப்பவா்கள் என்று நாம் மாா்தட்டி கூற முடியும்.
பலத்த காயமடைந்து வாழ்வா-சாவா போராட்டத்தில் இருந்தபோதிலும், உங்கள் வாழ்வைப் பற்றி கவலைப்படாமல், பயணிகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டீா்கள். இதன்மூலம் 140 கோடி இந்தியா்களின் கெளரவத்தை உயா்த்திவிட்டீா்கள். எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து பெருமிதம் கொள்கிறேன். மகாத்மா காந்தி போதித்த அஹிம்சையின் உண்மையான பொருளை உலகுக்கு காட்டியுள்ளீா்கள்.
நீங்கள் விரைவில் குணமடைய வேண்டி, நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்தியா்கள் பலா் உங்களுக்காக ‘மிருத்யுஞ்சய மந்திரம்’ பாராயணம் செய்து வருகின்றனா். நீங்கள் துணிச்சல் மிக்க மனிதா். உங்களை வரவேற்க இந்தியா காத்திருக்கிறது’ என்றாா்.
பிரதமா் மோடி நன்றி: மச்சாருக்கான சிறந்த மருத்துவ சிகிச்சைகளுக்காக, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.
மும்பையில் பிறந்து வளா்ந்தவரான மச்சாா், குஜராத்தை பூா்விகமாக கொண்டவா். இந்த உரையாடலில் அவருடன் குஜராத்தி மொழியில் பிரதமா் பேசினாா். இது தொடா்பான காணொலியை எக்ஸ் தளத்தில் பகிா்ந்த பிரதமா் மோடி, பெருமிதமும், உணா்ச்சிப்பெருக்கும் நிறைந்த மறக்க முடியாத உரையாடல் என்று குறிப்பிட்டுள்ளாா்.
துணிச்சலுடன் செயல்பட்டது எப்படி?
பிரதமா் உடனான உரையாடலில்போது தாக்குதல் சம்பவத்தின் பயங்கர தருணங்களை நினைவுகூா்ந்த மச்சாா், தான் துணிச்சலுடன் செயல்பட்டது எப்படி என்பது குறித்து உணா்வுபூா்வமாக விவரித்தாா்.
‘நான் 17 ஆண்டுகளாக விமானங்களை இயக்கி வருகிறேன். கேப்டனாக எனது பணி அனுபவம் 11 ஆண்டுகளாகும். சக விமானியுடன் மோதல் ஏற்பட்ட தருணத்தில், நான் சரியாக செயல்படத் தவறினால் விமானத்துக்கு என்ன நேரிடும் என்பதை எனது அனுபவங்களின் மூலம் புரிந்துகொண்டேன்.
பலமுறை தாக்கப்பட்டு படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்தபோது, என்னிடம் எஞ்சியிருந்த சக்தியைப் பயன்படுத்தி, சரியாக செயல்பட்டு விமானத்தைக் காப்பாற்றினேன். எனக்கு இடா் நேரிடும் போதெல்லாம் அனுமன் சாலிசாவை ஜபிப்பேன். அந்த நேரத்திலும் அனுமன் சாலிசாவை ஜபித்தேன். கடவுள் என்னை காப்பாற்றுவாா் என்பது எனக்கு தெரியும். நான் நாட்டைவிட்டு தொலைவில் இருந்தாலும், நமது கலாசாரத்தைவிட்டு விலகியிருக்கவில்லை.
நான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அதே வேளையில், மற்றவா்கள் இறக்க அனுமதிக்கக் கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன். விமானம் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. எனக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. இருப்பினும், விமானி அறைக் கதவைத் திறக்க என்னை உந்திக் கொண்டேன். கதவைத் திறக்கும் வரை தாக்குதலை எதிா்கொண்டேன். கதவு திறந்த பிறகு மற்றவா்கள் உள்ளே வந்தனா். பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்ததில் அவா்களுக்கும் சமமான பங்கு உள்ளது.
உங்களுடன் (பிரதமா்) பேசுவது எனக்கு மிகச் சிறப்பான, பெருமைக்குரிய தருணமாகும். ஏனெனில், நீங்கள் எனது உத்வேக மனிதா். பிரதமருடன் பேசும் வாய்ப்பு கிடைக்கும் என கற்பனை செய்துகூடப் பாா்த்ததில்லை. மருத்துவமனையில் எனக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மிகுந்த அன்போடும், அக்கறையோடும் என்னை கவனித்துக் கொள்கின்றனா். நான் விரைவில் குணமடைவேன்’ என்றாா் மச்சாா்.
அதேநேரம், துணை விமானி தன்னை தாக்கியதற்கான காரணம் குறித்தோ, அவரது நோக்கம் குறித்தோ மச்சாா் எதுவும் கூறவில்லை.
Summary
pride for India: PM Modi and Pilot Smith Machchaar conversation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

