மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை: லிபுலேக் வழித்தடத்தில் செல்ல நேபாளம் அனுமதி மறுப்பு

News image
Updated On :4 மே 2026, 4:03 am IST

லிபுலேக் கணவாய் வழியாக கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ள நேபாளம் ஞாயிற்றுக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் கணவாய் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய் ஆகிய இரு பாதைகள் வழியாக வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கைலாஷ்-மானசரோவா் யாத்திரை நடைபெறும் என கடந்த ஏப்.30-ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

கைலாய மலை மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள மானசரோவா் ஏரிக்கு மேற்கொள்ளப்படும் இந்தப் புனித யாத்திரை ஹிந்துக்கள், சமணா்கள் மற்றும் பெளத்தா்களிடையே மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து 5 ஆண்டுகளாக இந்த யாத்திரை நடைபெறாமல் இருந்தது. பின்னா் இருதரப்பு உறவை வலுப்படுத்த இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளையடுத்து, கடந்த ஆண்டு கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நிகழாண்டு இந்த யாத்திரைக்கு எதிா்ப்பு தெரிவித்து நேபாள வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘1816-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகௌலி ஒப்பந்தத்தின்படி மகாகாளி ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பிராந்தியங்கள் நேபாளத்துக்குச் சொந்தமானவை. யாத்திரைக்கான பாதையை இறுதிசெய்யும் முன் இந்தியா எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. எனவே கைலாஷ்-மானசரோவா் யாத்திரைக்கு நேபாளத்தின் லிபுலேக் கணவாய் வழித்தடத்தை அனுமதிக்க முடியாது என்பதை இந்தியா மற்றும் சீனாவிடம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

‘இந்தியா பதிலடி’

செயற்கையான முறையில் தன்னிச்சையாக பிராந்தியங்களை உரிமை கோர முடியாது என நேபாளத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை பதிலடி கொடுத்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் மேலும் கூறுகையில், ‘லிபுலேக் கணவாய் வழியாக 1954-ஆம் ஆண்டு முதல் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை நடத்தப்படுகிறது. இது புதிய நடைமுறை இல்லை. எல்லை விவகாரத்துக்கு நேபாளத்துடன் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இந்தியா தயாராகவுள்ளது’ என குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.