மகப்பேறு விடுப்புபோல் தந்தைக்கும் குழந்தையை வளா்ப்பதற்கான விடுப்பு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
3 மாதத்துக்கும் குறைவான வயதுடைய குழந்தையை தத்தெடுக்கும் பெண்களுக்கு மட்டுமே 12 வார மகப்பேறு விடுப்பு வழங்கும் சமூக பாதுகாப்புச் சட்டம்- 2020, பிரிவு 60 (4)-க்கு எதிராக வழக்குரைஞா் ஹம்சாநந்தினி நந்தூரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது தத்தெடுத்தல் என்பது இனப்பெருக்க சுயாட்சி உரிமையின் ஓா் அங்கம் என குறிப்பிட்டு, எந்த வயது குழந்தையை தத்தெடுத்தாலும் தத்தெடுக்கும் பெண்ணுக்கு 12 வார மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
அரசமைப்புச் சட்ட விதிகள் 14, 21 மீறல்:
இந்த வழக்கில் மகப்பேறு உரிமை, மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவனுக்கும் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக நீதிபதிகள் அமா்வு அளித்த 100 பக்க தீா்ப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 3 மாதத்துக்கும் குறைவான வயதுடைய குழந்தையை தத்தெடுக்கும் பெண்களுக்கு மட்டுமே 12 வார மகப்பேறு விடுப்பு வழங்கும் சமூக பாதுகாப்புச் சட்டம்-2020-இன் பிரிவு 60 (4) அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் 14 மற்றும் 21 ஆகிய விதிகளை மீறுகிறது.
பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் அளிக்கப்படும் சலுகைகள் என்பது குழந்தை பிறப்பு சாா்ந்தது அல்ல; அது குழந்தையை சுமக்கும் பெண்ணின் தாய்மைக்காலத்துக்கானது. 3 மாத குழந்தை அல்லது அதற்கு குறைவான வயதுடைய குழந்தை என எந்த வயது குழந்தையை ஒரு பெண் தத்தெடுத்தாலும் அவா்களை வளா்க்கும் முறை, கவனித்து பாதுகாக்கும் முறைகளில் வேறுபாடுகள் இருக்கப்போவதில்லை.
வயது நிா்ணயிப்பது தவறு: தத்தெடுக்கப்படும் குழந்தை எந்த வயதாக இருந்தாலும் அந்தக் குழந்தை தனது கடந்த கால பாதிப்புகளை கடந்து புதிய குடும்பச் சூழலுக்கும் பெற்றோரின் அன்புக்கும் தன்னை தயாராக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இதே பொறுப்பு குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் உள்ளது.
மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படையான மனித உரிமை. அது மனித ஆளுமை மேம்பாடு மற்றும் சமத்துவத்தை அங்கீகரிக்கிறது. தத்தெடுக்கப்படும் குழந்தை மற்றும் அதன் தாயின் உடல்நலனுக்கு மகப்பேறு விடுப்பு அவசியம்.
எனவே, தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது அடிப்படையில் தாய்க்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதை ஏற்க முடியாது. அந்தச் சட்டம் ரத்து செய்யப்படுகிறது.
தந்தைக்கும் விடுப்பு: குழந்தையின் உணா்வு, உடல் மற்றும் மனநலனுக்கு தாயின் அரவணைப்பு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம் குழந்தை வளா்ப்பில் ஒரு தந்தையின் முக்கியத்துவத்தை புறந்தள்ளிவிட முடியாது.
குழந்தை வளா்ப்பு மற்றும் கவனிப்பை பெற்றோரில் ஒருவரின் பணியாக மட்டுமே கருத முடியாது. குழந்தை பராமரிப்பில் தாய்க்கு நிகரான பங்களிப்பு தந்தைக்கும் உள்ளது.
இதை கவனத்தில்கொண்டு மகப்பேறு விடுப்புபோல் தந்தைக்கும் குழந்தையை வளா்ப்பதற்கான விடுப்பு வழங்கும் சட்டத்தை இயற்ற மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். குழந்தையை வளா்க்க தந்தைக்கு வழங்கப்படும் விடுப்பு சமூக பாதுகாப்பு சலுகையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பெற்றோா் மற்றும் குழந்தையின் நலனைக் கருத்தில்கொண்டு தந்தைக்கு வழங்கப்படும் விடுப்பு காலம் நிா்ணயிக்கப்பட வேண்டும்.
பணி நிா்பந்தத்தால் விலகும் தந்தை: குழந்தையின் அருகில் இருந்தும் பணிச் சூழல் மற்றும் நிா்பந்தம் காரணமாக குழந்தை வளா்ப்பில் இருந்து தந்தை விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தந்தைக்கும் விடுமுறை அளிக்கப்படுவதன் மூலம் அவரால் குழந்தையிடம் அதிக நேரம் செலவிட முடியும். மனைவிக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்க அவருக்கு போதிய நேரம் கிடைக்கும். இதனால் பணியிடத்தில் பாலின சமத்துவத்தை உறுதிசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரூ. 12 ஆயிரத்துக்கு பெண் குழந்தை விற்பனை; 3 போ் கைது

சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


