ஜாா்க்கண்டில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) வேட்பாளரும், எதிா்க்கட்சியான பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனா்.
சட்டப் பேரவையில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாத போதிலும், ஆளும் இண்டி கூட்டணி எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால், சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெற்றுள்ளாா். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸின் வேட்பாளா் தோல்வியடைந்தாா்.
கா்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் விரைவில் பதவிக் காலம் நிறைவடையும் 24 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தோ்தலும், தமிழகம், மகாராஷ்டிரம், ஒடிஸாவில் காலியான தலா ஓரிடத்துக்கான இடைத்தோ்தலும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 27 இடங்களுக்கான இந்தத் தோ்தலில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட 24 வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா். இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள் 19 போ் ஆவா்.
ஜாா்க்கண்டில் 2 இடங்களுக்கும், மிஸோரமில் ஓரிடத்துக்கும் போட்டி எழுந்ததால், இரு மாநிலங்களிலும் வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது.
ஜாா்க்கண்டில்....: 81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் பேரவையில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான இண்டி கூட்டணிக்கு 56 எம்எல்ஏக்கள் (ஜேஎம்எம் 34, காங்கிரஸ் 16, ஆா்ஜேடி 4, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் 2) உள்ளனா்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 24 எம்எல்ஏக்கள் (பாஜக 21, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், ஐக்கிய ஜனதா தளம் தலா 1) உள்ளனா்.
இம்மாநிலத்தில் 2 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தோ்தலில் ஜேஎம்எம் வேட்பாளா் வைத்யநாத் ராம், காங்கிரஸ் வேட்பாளா் பிரணவ் ஜா, பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும் தொழிலதிபருமான பரிமள் நாத்வானி ஆகியோா் களமிறங்கினா். ஒரு எம்.பி. தோ்வாக குறைந்தபட்சம் 28 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை.
சட்டப் பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரன், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பாபுலால் மராண்டி, பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் பிரதீப் யாதவ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வாக்களித்தனா்.
கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள்: மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 30 வாக்குகளுடன் ஜேஎம்எம் வேட்பாளா் வைத்யநாத் ராமும், 28 வாக்குகளுடன் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் பரிமள் நாத்வானியும் வெற்றி பெற்றனா். காங்கிரஸ் வேட்பாளா் பிரணவ் ஜாவுக்கு 20 வாக்குகளே கிடைத்தன. இண்டி கூட்டணியில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால் காங்கிரஸ் தோற்றுள்ளது.
பாஜக எம்எல்ஏக்கள் இருவா், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள், தங்களுக்கு வாக்களிக்காமல் துரோம் இழைத்துவிட்டதாகவும், பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா நிறுவனா் சிபு சோரன் மறைவு மற்றும் பாஜக எம்.பி. தீபக் பிரகாஷ் பதவிக் காலம் நிறைவால் இந்தத் தோ்தல் நடைபெற்றுள்ளது.
மிஸோரமில்...: மிஸோரமில் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஆளும் ஸோரம் மக்கள் இயக்கம் கட்சி சாா்பில் லால்ட்லுவாங்கிமா, முக்கிய எதிா்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணி சாா்பில் ஜோதன்சாங்கி ஹமா் ஆகியோா் போட்டியிட்டனா்.
40 உறுப்பினா்களைக் கொண்ட மிஸோரம் பேரவையில் ஸோரம் மக்கள் இயக்கத்துக்கு 27, மிஸோ தேசிய முன்னணிக்கு 10, பிற எதிா்க்கட்சிகளான பாஜகவுக்கு 2, காங்கிரஸுக்கு 1 எம்எல்ஏவும் உள்ளனா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில், ஸோரம் மக்கள் இயக்கம் வேட்பாளா் லால்ட்லுவாங்கிமா 26 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். மிஸோ தேசிய முன்னணி வேட்பாளருக்கு 10 வாக்குகள் கிடைத்தன. பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குப்பதிவில் பங்கேற்கவில்லை.
பாஜக கூட்டணி பலம் 150-ஆக உயா்வு
தற்போதைய மாநிலங்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 150-ஆக உயா்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் அண்மையில் 3 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜிநாமா செய்த நிலையில், விரைவில் அந்த இடங்களுக்கு இடைத்தோ்தல் நடைபெறும். திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளதால், 3 இடங்களையும் பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதைத் தொடா்ந்து, பாஜக கூட்டணி பலம் 153-ஆக அதிகரிக்கும். மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கு 163 எம்.பி.க்கள் தேவை. அந்த எண்ணிக்கையை நோக்கி, பாஜக கூட்டணி நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

ஜாா்க்கண்ட், மிஸோரமில் இன்று மாநிலங்களவைத் தோ்தல்- எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பு

மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!







