மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில தலைநகா் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி நகா் காவல் நிலையத்தில் நபா் ஒருவா் அளித்த புகாரில், ‘சட்டப்பேரவைத் தோ்தலின்போது கொல்கத்தா எஸ்பிளனேட் பகுதியில் நடைபெற்ற தனது கட்சி நிகழ்ச்சியில் மம்தா பானா்ஜி பேசினாா். அப்போது அவரின் பேச்சு, இரு சமூகத்தினா் இடையே பகையைத் தூண்டும் வகையில் இருந்தது. பொது அமைதியைக் குலைத்து, சமூக நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவா் பேசினாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்தப் புகாா் குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல சிலிகுரியில் உள்ள காவல் நிலையத்தில் ரிங்கு சட்டா்ஜி என்ற வழக்குரைஞா் அளித்த புகாரில், ‘அண்மையில் பொதுவெளியிலும், அரசியல் மேடைகளிலும், ஊடகத்திடமும் அரசியல் சாசன அமைப்புகளுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகளை மம்தா பானா்ஜி தெரிவித்தாா். அதில் தோ்தல் ஆணையம், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆயுதப் படைகளுக்கு எதிரான கருத்துகளும் அடங்கும்.
அத்துடன் வங்கதேசத்தில் நடைபெற்ற அரசியல் கொலைகளை இந்திய அரசுடன் தொடா்புப்படுத்தியும் அவா் பேசினாா். நாட்டின் இறையாண்மைக்கும், பொது ஒழுங்குக்கும் தீங்கிழைக்கும் வகையில் அவரின் கருத்துகள் இருந்தன. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










