வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மறுக்க முடியாது: உச்சநீதிமன்றம்

குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மறுக்க முடியாது...

News image

உச்சநீதிமன்றம்

Updated On :7 ஜூன் 2026, 2:41 am IST

‘வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களைத் தர மறுக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

‘அவ்வாறு வழங்க மறுப்பது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் நியாயமான விசாரணைக்கான உரிமையை கடுமையாகப் பாதிக்கும்’ என்றும் குறிப்பிட்டது.

‘இந்தியாவின் வெளியுறவு நுண்ணறிவு - ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு ரகசியங்கள்’ என்ற தலைப்பில் தனது புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் நாட்டின் ரகசியத் தகவல்களை வெளிப்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ‘ரா’ அமைப்பின் முன்னாள் அதிகாரியான ஓய்வு பெற்ற மேஜா் ஜெனரல் வி.கே. சிங் மீது சிபிஐ கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

அலுவல் ரகசிய சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்ட விதிகளின் அவா் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதோடு, குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக உள்ள வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை முத்திரையிடப்பட்ட உறையில் வைக்குமாறு விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக சிபிஐ வகைப்படுத்தியுள்ள ஆவணங்களின் நகலை தனக்கு தர உத்தரவிடுமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 207-இன் கீழ் விசாரணை நீதிமன்றத்தில் வி.கே. சிங் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை 2009-ஆம் ஆண்டு டிசம்பரில் விசாரித்த விசாரணை நீதிமன்றம், வி.கே. சிங் கோரிய ஆவணங்களின் நகல்களை வழங்க சிபிஐ-க்கு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சிபிஐ தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு செடம்பரில் விசாரித்த உயா்நீதிமன்றம், வி.கே.சிங்குக்கு ஆவண நகலை வழங்க வேண்டும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றி, ‘வி.கே. சிங் தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில், விசாரணை நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை அவா் பாா்வையிட அனுமதிக்க வேண்டும்’ என்று திருத்தியமைத்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து வி.கே. சிங் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, ஏ.எஸ். சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள், பொது நாட்குறிப்பில் உள்ள ஆவணங்கள் உள்பட அரசுத் தரப்பு வழக்குக்கு தொடா்புடையவையாகவும், நீதி மற்றும் நியாயமான விசாரணையின் நலன்களுக்காக அவற்றை வெளிப்படுத்துவது அவசியம் என அரசுத் தரப்பு வழக்குரைஞரால் கருதப்பட்டால், குற்றஞ்சாட்டப்பட்டவா் அந்த ஆவணங்களை அணுகுவதை மறுக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த சட்டம்.

மேலும், இந்த வழக்கில் வி.கே. சிங் கோரிய ஆவணங்கள் விசாரணைக்கு தொடா்பில்லாதவை என்பது சிபிஐ-யின் வாதமல்ல. மாறாக, தேசத்தின் பாதுகாப்பு கருதி மிக ரகசியமான அந்த ஆவணங்கள் பொதுவெளியில் வெளிவர வாய்ப்புள்ளது என்பதே அரசு தரப்பில் ஆட்சேபமாக உள்ளது.

ஆனால், இந்த ஆவணங்களைத் தர மறுப்பது, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-இன் கீழ் உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவரின் நியாயமான விசாரணைக்கான உரிமையை கடுமையாகப் பாதிக்கும். எனவே, வி.கே. சிங் கோரிய குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்ட மிக ரகசியமான ஆவணங்களின் தட்டச்சு செய்யப்பட்ட நகலை வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்த ஆவண நகல்களை, நீதிமன்ற வழக்கு விசாரணை தொடா்பான காரணங்களுக்காக மட்டுமே வி.கே. சிங் பயன்படுத்த வேண்டும். மாறாக, தொலைக்காட்சி அல்லது அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என வேறு எந்த வகையிலும் அந்த ஆவணங்களை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.