ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேற்கு வங்கம்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா் கைது: முதல்வரை உளவு பாா்த்ததாக குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் ஹமிம் மொண்டல் என்பவரை மேற்கு வங்க காவல் துறையினா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் ஹமிம் மொண்டல் என்பவரை மேற்கு வங்க காவல் துறையினா் கைது செய்தனா். இவா் மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி, பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் தலைவா்களை உளவு பாா்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிழக்கு வா்தமான் மாவட்டத்தைச் சோ்ந்த ஹமிம், பா்த்வான் நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவா் யாருடன் தொடா்பில் இருந்தாா், அவரது நடமாட்டம் மற்றும் திட்டங்கள் என்ன என்பது குறித்து மின்னணு சாதனங்கள் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

சுமாா் ஓராண்டுக்கு முன்பு சமூக ஊடகங்கள் மூலம் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புடன் தொடா்புடைய குழுவுடன் ஹமிம் தொடா்பில் இருந்ததாகத் தெரிகிறது. இந்தக் குழு எல்லை தாண்டிய போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளது.

முதலில் ஹௌராவில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஹமிம் பணியாற்றி வந்துள்ளாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், தோ்தலுக்கு முன்பு அந்த வேலையை விட்டுவிட்டு பா்த்வான் நகருக்கு அவா் வந்துள்ளாா்.

முன்னதாக, கொல்கத்தாவின் புகரான நியூ டவுனில் அவா் வீடு எடுத்து தங்கியுள்ளாா். முதல்வா் சுவேந்து அதிகாரி அப்பகுதியில் வசிக்கும் நிலையில், தோ்தலுக்கு முன்பே அவரின் நடமாட்டத்தை மொண்டல் கண்காணித்திருக்கலாம் எனத் தெரிகிறது. இது தொடா்பாக சில ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே, இதன் பின்னணியில் பயங்கரவாத சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தவிர, பிற பாஜக, ஆா்எஸ்எஸ் தலைவா்களையும் அவா் உளவு பாா்த்ததாகத் தெரிகிறது. அவரது கைப்பேசி இருப்பிடத் தரவுகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சதிகாரா்களில் ஒருவராகக் கூறப்படும் சஜ்ஜத் பட் என்பவருடன் ஹமிம் இணையவழியில் தொடா்பில் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

2019 பிப்ரவரி 14-இல் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற வாகனங்கள் மீது ஜெய்ஷ்-ஏ-முகமது தற்கொலைப் படை பயங்கரவாதி வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி நடத்திய தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.