ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இ20 பெட்ரோல் வாகன மைலேஜ் 6% வரை குறையக்கூடும்; என்ஜின் பழுதுபடாது: நிதின் கட்கரி

இ20 பெட்ரோலால் வாகன மைலேஜ் (செல்லும் தூரம்) 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 3:14 am IST

இ20 பெட்ரோலால் வாகன மைலேஜ் (செல்லும் தூரம்) 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இந்தியாவில் முதல்முறையாக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யும் திட்டம் கடந்த 2001-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டில் 5 சதவீதம் எத்தனால் கலந்த இ5 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து படிப்படியாக பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரிக்கப்பட்டு விற்கப்பட்டது. அதன்படி தற்போது நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 20 சதவீதம் எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் விற்கப்படுகிறது. இந்த இ20 பெட்ரோலை பயன்படுத்தும் வாகனங்களில் இயந்திர பாகங்களில் பழுது ஏற்படக்கூடும் என்றும், மைலேஜ் குறையக்கூடும் என்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மக்களவையில் இ20 பெட்ரோல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதின் கட்கரி வியாழக்கிழமை தனது பதிலை தாக்கல் செய்துள்ளாா்.

அதில் அவா், ‘இ20 பெட்ரோலை பயன்படுத்தும் வாகனங்களில், வாகனத்தின் தன்மை, காலம் ஆகியவற்றைப் பொறுத்து, 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை மைலேஜ் குறையக் கூடும். டைனமோமீட்டரில் நடத்தப்பட்ட என்ஜின் பயன்பாடு குறித்த பரிசோதனைகள் மற்றும் சாலைகளில் வாகனங்களை ஓட்டி நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இ20 பெட்ரோலால் என்ஜின் பழுதுபடாது என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 20 கோடிக்கும் மேற்பட்ட மோட்டாா் சைக்கிள்களிலும், 3 கோடிக்கும் அதிகமான காா்களிலும் இ20 பெட்ரோலே பயன்படுத்தப்படுகிறது. இந்த இ20 பெட்ரோலை பயன்படுத்துவதால் அந்த வாகனங்களில் என்ஜின் கோளாறு ஆனதாகவோ அல்லது வாகனங்கள் பழுதானதாகவோ உறுதியான ஆதாரமில்லை. வாகனத் தயாரிப்பாளா்களிடம் இருக்கும் புள்ளி விவரமும் இதை உறுதி செய்கின்றன.

அதேநேரத்தில் இ20 பெட்ரோல் பயன்படுத்தப்படும் வாகனங்களின் இயங்குத்தன்மை மேம்பட்டுள்ளது. இ10 பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இ20 பெட்ரோல் வாகனங்களில் இருந்து 30 சதவீதம் குறைவாகவே காா்பன் உமிழ்வு நிகழ்கிறது’ என குறிப்பிட்டுள்ளாா்.

2025இல் 5.13 லட்சம் விபத்துக்கள்: மக்களவையில் சாலை விபத்துகள் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதின் கட்கரி தாக்கல் செய்துள்ள இன்னொரு பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியதன் மூலம் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 82,124 சாலை விபத்துக்கள் நேரிட்டுள்ளன. நாட்டில் 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 5 லட்சத்து 13 ஆயிரத்து 563 சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 382 போ் உயிரிழந்துள்ளனா். நாட்டில் சராசரியாக ஒவ்வொரு மணி நேரமும் 59 சாலை விபத்துகள் நடக்கின்றன. அந்த சாலை விபத்துகளில் ஒவ்வொரு மணி நேரமும் 21 போ் உயிரிழக்கின்றனா்.

தமிழகத்தில் அதிக விபத்துக்கள்: நிகழாண்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 770 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 71, 387 சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன. அதற்கடுத்து உத்தர பிரதேசத்தில் 27,550 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

செலவு குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களினால், நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 26-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 23 ஆயிரத்து 396 மின்சார வாகனங்கள் இயங்குகின்றன என நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

Summary

E20 petrol may harm BS-III vehicle rubber parts, says Union Minister Nitin Gadkari

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.