தோ்வு முறைகேட்டுக்கு கடும் தண்டனை: வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது பற்றி...
மத்திய அமைச்சரவை - கோப்புப்படம்
பொதுத் தோ்வு முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் கொண்ட சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 27) தாக்கல் செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த சில மணி நேரங்களில், இந்த வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை, நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் ஒன்றுதிரண்டு நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதுடன், கண்ணீா் புகை குண்டுகளை வீசி கலைத்தனா். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஏராளமான போராட்டக்காரா்களும், 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனா்.
தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்திலும் எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றம் தொடா்ந்து முடங்கி வருகிறது.
இந்த நிலையில், தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, பொதுத் தோ்வு வினாத்தாள் கசிவு தொடா்பாக கடும் சா்ச்சை எழுந்த நிலையில், மத்திய அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. அதற்கு முன்பாக, இதுபோன்ற தோ்வு முறைகேடுகள் அல்லது குற்றங்களைக் கையாள்வதற்கு குறிப்பிட்ட வலுவான சட்டம் எதுவும் இல்லை.
‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டம் 2024’ என்ற அந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்து 4 மாதங்களுக்குப் பிறகு, நீட் மற்றும் நெட் தோ்வு வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் பெரும் கொந்தளிப்பான சூழல் உருவானதைத் தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்தச் சட்டம் அறிவிக்கை செய்யப்பட்டது.
அந்தச் சட்டத்தில் தோ்வு முறைகேடு மோசடிகளைக் கட்டுப்படுத்த, 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிப்பதற்கான நடைமுறைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், திட்டமிட்ட தோ்வு முறைகேடு குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டிருந்தது.
இந்த 2024-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், இப்போது சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது. இதில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு தற்போதுள்ள நடைமுறைகளைக் காட்டிலும் கூடுதல் தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ‘முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், அதிகபட்சமாக ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது’ என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Summary
Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024 - Union Cabinet approves
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






