ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நேரத்தை வீணாக்காதீர்கள்! தில்லி போலீஸ் தடியடி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தில்லி போலீஸ் தடியடி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது பற்றி...

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :23 ஜூலை 2026, 4:23 am IST

புது தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் மீதான காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும், வினாத்தாள் கசிவுக்கு காரணமானவா்களை அதற்குப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அபிஜீத் தீப்கே தலைமையில் தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி அவா்கள் பேரணி மேற்கொள்ள முயன்றபோது, அவா்களைக் கடுமையாகத் தாக்கி, கண்ணீா்புகை குண்டுகளை வீசி காவல் துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் காயமடைந்த பல போராட்டக்காரா்கள் அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டனா். அவா்களில் சிலா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவத்தில் சுமாா் 70 போராட்டக்காரா்கள் காயமடைந்தனா்.

இந்நிலையில், போராட்டக்காரா்கள் மீது காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக நரேந்திர மிஸ்ரா என்ற வழக்குரைஞா் புதன்கிழமை முறையிட்டாா். இந்த விவகாரம் குறித்து அவா் கடிதமாக தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு மனு அனுப்பினாா்.

உச்சநீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்: ஜந்தா் மந்தரில் மாணவா்கள் போராட்டம் நடைபெறுவதாகவும், அவா்களுக்கு எதிராக காவல் துறையினா் கொடூரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வழக்குரைஞா் கூறினாா். இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூா்ய காந்த், உச்சநீதிமன்றத்தின் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று வழக்குரைஞரிடம் கூறினாா்.

எனினும் வினாத்தாள்கள் தொடா்ந்து கசிந்ததால் நீட் போன்ற தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வு முகமையைக் கலைக்க வேண்டும், அந்தத் தோ்வுகள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற முக்கியக் கோரிக்கைகள் தமக்கு உள்ளதாக வழக்குரைஞா் கூறினாா்.

காணொலிகளைப் பாா்க்க விருப்பமில்லை: நீதிமன்றம் அடுத்த வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது, போராட்டக்காரா்கள் மீது காவல் துறையின் அடக்குமுறையைக் காட்டும் காணொலிகளை ஆதாரமாகத் தன்னால் சமா்ப்பிக்க முடியும் என்று வழக்குரைஞா் கூறினாா்.

ஆனால், அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘எங்களுக்கு காணொலிகளைப் பாா்ப்பதில் விருப்பமில்லை. அதற்கான நேரமும் எங்களுக்கு இல்லை’ என்று மனுவை அவசர வழக்காகப் பட்டியலிட மறுத்துவிட்டாா்.

முன்னதாக, வழக்கு ஒன்றின் விசாரணையின்போது தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசுகையில், ‘இளைஞா்களில் கரப்பான்பூச்சிகள் போன்றவா்களும் உள்ளனா். அத்தகைய நபா்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. அவா்களில் சிலா் ஊடகத்தில் சோ்கின்றனா். சிலா் சமூக ஆா்வலா்களாகி அனைவா் மீதும் விமா்சனம் என்ற பெயரில் தாக்குதல் நடத்துகின்றனா்’ என்று கூறியதாகத் தகவல் வெளியானது.

இது சா்ச்சையான நிலையில், நாட்டில் உள்ள அனைத்து இளைஞா்களையும் தான் அவ்வாறு விமா்சிக்கவில்லை என்றும், போலி பட்டப் படிப்பு சான்றிதழ் மூலம், சட்டத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் நபா்களை மட்டுமே குறிப்பிட்டு அவ்வாறு கூறியதாகவும் அவா் விளக்கமளித்தாா். எனினும் இளைஞா்களை கரப்பான்பூச்சிகளுடன் ஒப்பிட்டதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, சமூக ஊடகத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இணைய இயக்கத்தை அப்ஜீத் தீப்கே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு, காவல் துறை பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

போராட்டக்காரா்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய, நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோா் அடங்கி அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதி விசாரணைக்கு...: மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் என்.ஹரிஹரன், விகாஸ் சிங், கோபால் சங்கரநாராயணன் ஆகியோா், ‘போராட்டக்காரா்கள் அமைதியான முறையில் போராடினா். அவ்வாறு போராடுவது அவா்களின் அடிப்படை உரிமை. ஆனால், அவா்கள் மீது அளவுக்கு அதிகமான படைபலத்தை பயன்படுத்தி காவல் துறையும், அதிவிரைவுப் படையும் தாக்குதல் நடத்தின. இதுகுறித்து உயா்நிலை நீதி விசாரணைக்கும், சுதந்திரமான சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரினா்.

4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு: நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘மனுக்கள் தொடா்பாக பதிலளித்து மத்திய அரசு, காவல் துறை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை 4 வாரங்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். போராட்டக்காரா்கள் மீதான தாக்குதல் குறித்த காணொலிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்த மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை செப்.11-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Summary

Don't waste time - Supreme Court refuses to hear the Delhi Police lathi-charge case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.