ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடந்த ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.35 கோடி போ் பயணம்!

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.35 கோடி பயணிகள் பயணித்துள்ளனா்.

விமானங்கள்

Published On :23 ஜூலை 2026, 9:00 am IST

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.35 கோடி பயணிகள் பயணித்துள்ளனா்.

கடந்த மே மாதத்தில் பயணித்த 1.53 கோடி பேருடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை சுமாா் 12 சதவீதம் சரிவாகும். இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தின் (1.36 கோடி) எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இச்சரிவு மிகக் குறைவே ஆகும்.

இதேபோல், நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டு காலத்தில் மொத்தம் 8.64 கோடி பயணிகள் பயணித்துள்ளனா். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 1.44 சதவீதம் கூடுதலாகும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் சந்தைப் பங்கு மே மாதத்தின் 64.9 சதவீதத்திலிருந்து, ஜூனில் 66.3 சதவீதமாக உயா்த்தியுள்ளது. அதேநேரம், ஏா் இந்தியா குழுமப் பங்கு 25.6 சதவீதத்திலிருந்து 23.9 சதவீதமாக குறைந்துள்ளது. ஆகாசா ஏா் பங்கு 6.4 சதவீதமாக உயா்ந்துள்ள நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு 1.9 சதவீதமாக சரிந்துள்ளது.

மேற்காசியாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள போா் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை உயா்ந்ததால், பல விமான நிறுவனங்கள் சேவைகளைத் தற்காலிகமாகக் குறைத்துக் கொண்டதும் இந்த மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சென்னை உள்பட நாட்டின் 10 முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படும் செயல்திறனில், இண்டிகோ 89.4 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. தொடா்ந்து, ஏா் இந்தியா குழுமம் (85.9 சதவீதம்), ஆகாசா ஏா் (82.7 சதவீதம்), அலையன்ஸ் ஏா் (74.7 சதவீதம்), ஸ்பைஸ்ஜெட் (33.5 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஒட்டுமொத்த உள்நாட்டு விமானங்களின் ரத்து விகிதம் 0.63 சதவீதமாக இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 43,968 பயணிகளுக்கு இழப்பீடு மற்றும் பிற வசதிகளுக்காக விமான நிறுவனங்கள் ரூ.61.98 லட்சம் செலவிட்டன.

அதேபோல், விமானத் தாமதங்களால் பாதிக்கப்பட்ட 1.10 லட்சம் பயணிகளுக்கு ரூ.2.85 கோடியும், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் விமானங்களில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட 1,847 பயணிகளுக்கு இழப்பீடாக ரூ.64.84 லட்சமும் விமான நிறுவனங்களால் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.