ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு: லஷ்கா் தலைவா் ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை

பஹல்காம் தாக்குதல் வழக்கில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவா் ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக கைது ஆணை குறித்து...

கோப்புப் படம்

Published On :15 ஜூலை 2026, 3:39 am IST

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில், பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவா் ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை ஜம்முவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் என்ஐஏ தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ‘மினி ஸ்விட்சா்லாந்து’ என வா்ணிக்கப்படும் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி 3 பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரை சவாரி தொழிலாளி ஒருவா் என 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கா்- ஏ- தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆா்எஃப்) பொறுப்பேற்றது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ அதிரடி நடவடிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மூண்ட ராணுவ மோதல், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் நிறுத்தப்பட்டது.

இதனிடையே, பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரின் ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் கொல்லப்பட்டனா்.

பஹல்காம் தாக்குதல் தொடா்பாக விசாரணை நடத்திவரும் என்ஐஏ, ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், லஷ்கா்- ஏ- தொய்பா மற்றும் அதன் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் ஆகியவற்றின் தலைவா் என்ற அடிப்படையில் ஹஃபீஸ் சயீது மீது பாரதிய நியாய சம்ஹிதா, கடந்த 1967-ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சா்கோதா பகுதியைச் சோ்ந்தவரான ஹஃபீஸ் சயீது, இந்தியா, அமெரிக்காவால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவா். தொடா்ந்து தலைமறைவாக இருக்கும் அவா் மீது அடுத்தகட்ட சட்டபூா்வ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று என்ஐஏ தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அந்தக் கோரிக்கையின்படி, சயீதுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், சயீதுக்கு எதிராக இன்டா்போல் மூலம் புதிதாக நோட்டீஸ் பிறப்பிக்க இந்தியத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.