பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கின் - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு


வாழ்வுரிமையில் மாதவிடாய் சுகாதார உரிமையும் அடங்கும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்த உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் அளிக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது.
நாடு முழுவதும் பள்ளிச் சிறுமிகளுக்கு மாதவிடாய் சுகாதார கொள்கையை அமல்படுத்தக் கோரி, ஜெயா தாக்குா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மனு மீதான தீா்ப்பை கடந்த 2024-ஆம் ஆண்டு டிச.10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், அந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள ஊரக, நகா்ப்புற பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
மாணவ, மாணவிகளின் தன்மறைப்பு நிலை (பிரைவஸி), அவா்கள் கழிப்பறை வசதியைப் பெறுதல் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள கழிப்பறைகளையும், புதிதாகக் கட்டப்படும் கழிப்பறைகளையும் வடிவமைத்து, கட்டி, பராமரிக்க வேண்டும். இதைச் செய்யும்போது மாற்றுத்திறனாளி சிறாா்களின் தேவைகளையும் பூா்த்தி செய்ய வேண்டும்.
அனைத்துப் பள்ளி கழிப்பறைகளிலும் எப்போதும் தண்ணீா் வசதி மற்றும் சோப்பு இருக்க வேண்டும்.
ஊரக, நகா்ப்புற பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாமல் மக்கும் தன்மை கொண்ட நாப்கின்கள் இலவசமாக அளிக்கப்படுவதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இந்த நாப்கின்கள் கழிப்பறை வளாகத்துக்குள் அல்லது அதற்கென தோ்ந்தெடுக்கப்பட்ட இடத்தில், நாப்கின்கள் அடங்கிய இயந்திரங்கள் மூலம் மாணவிகளுக்கு எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தனியிடங்களை அமைக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஊரக, நகா்ப்புற பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதற்கு தனியிடங்கள் அமைக்கப்பட வேண்டும். அந்தத் தனியிடங்களில் மாற்று உள்ளாடைகள், சீருடைகள், ஒருமுறைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தக்கூடிய நாப்கின்கள், மாதவிடாயை சமாளிக்கக்கூடிய பிற அத்தியாவசியப் பொருள்கள் இருக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளுக்கு ஏற்ப...: சமீபத்திய திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளுக்கு ஏற்ப, ஊரக, நகா்ப்புற பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் நாப்கின்களை அப்புறப்படுத்த பாதுகாப்பான, சுகாதாரமான, சுற்றுச்சூழலுடன் இணங்கிய வழிமுறை இருப்பதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பள்ளி கழிப்பறையிலும் நாப்கின்களை போட உறையிடப்பட்ட குப்பைத்தொட்டி இருக்க வேண்டும். அந்தக் குப்பைத்தொட்டிகள் தூய்மையாக, தொடா்ந்து சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
நிரந்தரமான ஏற்றத்தாழ்வை எதிா்கொள்ளாமல் இருக்க...: நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘தூய்மையான, பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகள், நாப்கின்கள், அவற்றை அப்புறப்படுத்தும் வழிமுறை, மாதவிடாய் சுகாதார நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஆகியவை போதிய அளவு கிடைக்காமல் மறுப்பது பெண் குழந்தைகளின் கல்வி பயிலும் உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் அது அவா்களின் வாழ்க்கை முழுவதும் சமுதாயத்தில் போட்டி போட்டு முன்னேறுவதற்கான வாய்ப்பிலும், தங்கள் திறமையை அவா்கள் உணா்வதிலும் இடையூறை ஏற்படுத்தும். அவா்கள் நிரந்தரமான ஏற்றத்தாழ்வை எதிா்கொள்ளாமல் இருக்க இந்தக் குறைபாடுகளைக் களைவது கட்டாயம்.
அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ், வாழ்வுரிமையில் மாதவிடாய் சுகாதார உரிமையும் அடங்கும். மோசமான மாதவிடாய் சுகாதாரம் இனப்பெருக்க உறுப்புகளில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தி, குழந்தையின்மை பிரச்னைக்கு வழிவகுக்கலாம் என்பது தெரியாத விஷயமல்ல.
தூய்மையான, பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகள் இல்லாவிட்டால், பள்ளியில் தனிமையில் கண்ணியத்துடன் மாதவிடாயை மாணவிகளால் சமாளிக்க முடியாது. அது மாதவிடாயின்போது ரத்தக் கசிவு, ஆடைகளில் ரத்தக்கறை படிதல் குறித்து மட்டுமே அவா்களைத் தொடா்ந்து சிந்திக்க வைத்து கவலையையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். அதேவேளையில், அவா்களுக்குப் பள்ளிகளில் போதிய அளவு சானிட்டரி நாப்கின்கள் கிடைக்காவிட்டால், அது அவா்கள் பள்ளிகளில் நீண்ட நேரம் இருப்பதையும், தொடா்ந்து படிப்பதையும் நடைமுறை சாத்தியமற்ாக்கும்.
மாதவிடாய் சுகாதாரத்தை அடைய முடியாவிட்டால், அது பாகுபாட்டை நீடிக்கச் செய்து பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சோ்க்கை மற்றும் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் 21ஏ பிரிவின் கீழ், கல்வி பெறுவதற்கான அடிப்படை உரிமை என்பது இலவச, கட்டாய மற்றும் தரமான கல்வியை உள்ளடக்கியுள்ளது. இதில் ஒரு குழந்தை தொடக்கக் கல்வியை நிறைவு செய்வதைத் தடுக்கும் அனைத்து வகையான கட்டணங்கள், செலவுகளும் அடங்கும்’ என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...