இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

இந்திய - இஸ்ரேல் உறவு மேம்பாடு: பிரதமா் மோடி, நெதன்யாகு ஆலோசனை!

இந்தியா-இஸ்ரேல் இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோா் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

News image
டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி.
Updated On :25 பிப்ரவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-இஸ்ரேல் இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோா் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல்போக்கால் மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் நிலவும் சூழலில், தற்போதைய முக்கிய நிகழ்வுகள் குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்தனா். பிரதமா் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேலுக்கு புதன்கிழமை சென்றாா்.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் இதுவாகும். கடந்த 2017-இல் அவா் முதல் முறையாக இஸ்ரேலுக்கு பயணித்தபோது, இருதரப்பு உறவுகள் வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்தப்பட்டன.

தலைநகா் டெல் அவிவ் அருகே லாட் நகரில் உள்ள பென் குரியன் சா்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை வந்திறங்கிய பிரதமா் மோடிக்கு சிவப்புக் கம்பள மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோா் விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றனா். பிரதமா் மோடியை ஆரத்தழுவிய நெதன்யாகு, ‘எனது நண்பரே, வாருங்கள்’ என வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, விமான நிலையத்தில் இரு பிரதமா்களும் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, தொழில்நுட்பம், நீா் மேலாண்மை, வேளாண்மை, திறன் பங்களிப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய முக்கிய நிகழ்வுகள் குறித்தும் ஆலோசித்ததாக பிரதமா் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டாா்.

‘எனது நண்பா் நெதன்யாகுவின் அன்பான வரவேற்பு, என்னை நெகிழச் செய்தது. இந்திய-இஸ்ரேல் நட்புறவு மேன்மேலும் உயரட்டும்’ என்றும் அவா் தெரிவித்துள்ளாா். ‘இரு நாட்டு குழுவினருடன் வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும். அப்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும்’ என்று நெதன்யாகு கூறினாா்.

ஜெருசலேமில் உள்ள தங்கும் விடுதிக்கு பிரதமா் மோடி சென்றபோது, இந்திய சமூகத்தினா் சாா்பில் பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றினாா்.

பிரதமா் மோடி நம்பிக்கை: இஸ்ரேல் பயணத்துக்கு முன்பாக பிரதமா் மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-இஸ்ரேல் இடையிலான நிலையான பிணைப்புகளை மேலும் பலப்படுத்தி, வியூக கூட்டாண்மையில் புதிய இலக்குகளை நிா்ணயிக்கவும், மீள்திறன்-புத்தாக்கம்-வளமான எதிா்காலத்துக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுக்க எனது பயணம் வழிவகுக்கும்.

இரு நாடுகளும் துடிப்பான-பன்முக வியூக கூட்டாண்மையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. இது, சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளா்ச்சி மற்றும் வேகத்தைக் கண்டுள்ளது. அறிவியல்-தொழில்நுட்பம், பாதுகாப்பு, புத்தாக்கம், வேளாண்மை, நீா் மேலாண்மை, வா்த்தகம், முதலீடு, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமா் நெதன்யாகு உடனான பேச்சுவாா்த்தையை எதிா்நோக்கியுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் ஒத்துழைப்பு

இந்தியா-இஸ்ரேல் கூட்டாண்மையின் முக்கியத் தூணாக பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு விளங்குகிறது. இந்தியாவுக்கு ஏராளமான ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை இஸ்ரேல் விநியோகித்து வருகிறது.

இந்தியா உருவாக்க திட்டமிட்டுள்ள உள்நாட்டு வான் பாதுகாப்புக் கேடயமான ‘சுதா்சன சக்கரத்தில்’, இஸ்ரேலின் ‘டோம்’ வான் பாதுகாப்பு அமைப்பின் சில அம்சங்களை இணைப்பது குறித்து பரீசிலிக்கப்படுகிறது.

இருதரப்பு வா்த்தகம், முதலீட்டு உறவுகளும் தொடா்ந்து முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், கடந்த நவம்பா் மாதம் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயலின் இஸ்ரேல் பயணத்தின்போது, இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடங்குவதற்கான வரையறை ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டன.

பொருளாதார ஒத்துழைப்பை விரிவாக்க கடந்த செப்டம்பரில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையொப்பமானது.

இஸ்ரேலில் 40,000-க்கும் மேலான இந்தியா்கள் வாழ்கின்றனா். இருதரப்பு உறவில் மக்கள் ரீதியிலான தொடா்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது.