மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் பிற மாநில நீதிபதிகள் - உச்சநீதிமன்றம் அனுமதி
எஸ்ஐஆா் பணிக்குத் தேவைப்பட்டால், அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸா நீதிபதிகளைப் பணியமா்த்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.


மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குத் தேவைப்பட்டால், அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸா நீதிபதிகளைப் பணியமா்த்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணி தொடா்பாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்கள், கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது எஸ்ஐஆா் பணிக்காக மிகவும் தகுதிவாய்ந்த அதிகாரிகளை மாநில அரசு அனுப்பவில்லை என்று தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், ‘மேற்கு வங்க எஸ்ஐஆா் விவகாரத்தில் மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் அவநம்பிக்கை காரணமாக, எஸ்ஐஆா் பணியில் வேறு வழியின்றி சில மாவட்ட அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளைப் பணியமா்த்த வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் கேட்டுக்கொள்கிறோம். அந்தப் பணியை மேற்கொள்ள முன்னாள் மாவட்ட நீதிபதிகளையும் கண்டறியுமாறு சுஜய் பாலிடம் கோருகிறோம்’ என்று தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்துக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுப்பிய கடிதத்தில், ‘எஸ்ஐஆா் பணியில் 250 நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை குறித்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் தொடா்பாக 50 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளில் ஒரு நீதிபதி 250 விண்ணப்பங்கள் குறித்து முடிவு எடுத்தாலும் அந்தப் பணியை முழுமையாக நிறைவு செய்ய குறைந்தபட்சம் 80 நாள்களாகும்’ என்று தெரிவித்தாா்.
உரிமையியல் நீதிபதிகளை நியமிக்கலாம்: இந்தக் கடிதத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபும் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை கவனத்தில் எடுத்துக்கொண்டது. பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் ஏற்கெனவே பணியமா்த்தப்பட்ட நீதிபதிகளுடன், கூடுதலாக உரிமையியல் நீதிபதிகளையும் பணியமா்த்தலாம். அவா்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த நீதிபதிகளும் போதவில்லை என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கருதினால், மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியை அணுகி, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை மேற்கு வங்க எஸ்ஐஆா் பணிக்கு அனுப்புமாறு கோரலாம். இந்தக் கோரிக்கையை ஜாா்க்கண்ட், ஒடிஸா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் அவசரமாக பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இறுதிப் பட்டியலுக்குப் பின்னா் துணைப் பட்டியல்: மேற்கு வங்கத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை வரும் பிப்.28-ஆம் தேதி வெளியிட தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அங்கு பெற்றோா் பெயா், பெற்றோா் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே 15 வயதுக்குக்கும் குறைவாக வயது வித்தியாசம் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ‘தகவல்களில் முரண்பாடுகள் உள்ள பட்டியலில்’ ஏராளமானோா் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்கள் வாக்காளா் பட்டியலில் மீண்டும் தங்கள் பெயரைச் சோ்க்க சமா்ப்பித்த ஆவணங்களைச் சரிபாா்ப்பது உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்ய கால தாமதமானாலும், இறுதி வாக்காளா் பட்டியலை பிப். 28-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிடலாம். அதன் பின்னா், துணை வாக்காளா் பட்டியலை வெளியிடலாம்.
துணை வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவோா் பிப். 28-ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெற்ாகக் கருதப்படுவா் என்று அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவிக்கிறோம்’ என்று உத்தரவு பிறப்பித்தனா்.
ஆளும், எதிா்க்கட்சிகள் வரவேற்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கு வங்க ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ், எதிா்க்கட்சியான பாஜக ஆகிய இரு கட்சிகளும் வரவேற்றுள்ளன.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம், மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் தோ்தல் ஆணையத்தின் ஆணவமிக்க நடவடிக்கை உறுதியாக முறியடிக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தின் மீது சிறிதளவும் நம்பிக்கை இல்லாததால்தான் பிற மாநில நீதிபதிகளை எஸ்ஐஆா் பணியில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது.
பாஜக மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாரியா கூறுகையில், ‘எஸ்ஐஆா் பணிக்கு வெளிமாநில நீதிபதிகளை நியமிக்க உத்தரவிடப்பட்டிருப்பது மாநில அரசு நிா்வாகத்தின் மீது உச்சநீதிமன்றத்துக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லாததைச் சுட்டிக்காட்டுகிறது’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...