இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மோடி ரத்துசெய்ய வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. திடீரென்று அந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி இறுதிசெய்தது ஏன்?


போபால்: "இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நெருக்கடிக்குப் பணிந்து செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது:
இந்திய}அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நெருக்கடிக்குப் பணிந்து செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் இதயத்தை தைத்த அம்பாகும்.
உலக நாடுகள் மீது வரி விதிப்பது தொடர்பான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமர் மோடி துணிவிருந்தால் ரத்து செய்ய வேண்டும். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியாது.
எப்ஸ்டீன் ஃபைல் எனப்படும் ரகசிய ஆவணங்களை வெளியிடுவோம் என்று அமெரிக்கா அச்சுறுத்தியது, அமெரிக்காவில் நம்நாட்டுத் தொழிலதிபர் அதானி மீது நடைபெறும் குற்றவியல் வழக்கு போன்ற நெருக்கடிகள் காரணமாக அந்நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு மோடி உடன்பட்டார்.
இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி சமரசம் செய்து கொண்டுவிட்டார். நெருக்கடிக்குப் பணிந்து அவர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு விட்டார்.
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. திடீரென்று அந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி இறுதிசெய்தது ஏன்?
அதற்கு இரு காரணங்கள்தான் உள்ளன. அமெரிக்காவில் லட்சக்கணக்கான எப்ஸ்டீன் ஃபைல் எனப்படும் ரகசிய ஆவணங்கள் குவிந்துள்ளன. மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள், விடியோ காட்சிகள் உள்பட 30 லட்சம் ஆவணங்கள் அங்கு உள்ளன. இந்த ஆவணங்களில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவை வெளியானால் அது பிரதமருக்கு அச்சுறுத்தலாக அமையும்.
இந்திய}அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு மோடி உடன்பட்டதற்கு மற்றொரு காரணம் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவில் நடந்து வரும் வழக்காகும். இந்த வழக்கு அதானியைக் குறிவைக்காமல் மோடியைக் குறிவைக்கிறது.
மத்திய அமைச்சரவையைக் கலந்து ஆலோசிக்காமலும் ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சௌஹான், நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களின் நம்பிக்கையைப் பெறாமலும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு மோடி உடன்பட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வேளாண்மை, தகவல், ஜவுளி, இறக்குமதி ஆகிய துறைகளில் சமரசம் செய்து கொண்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு மக்களவையில் என்னைப் பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ஏனெனில், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பினேன் என்பதே அதற்குக் காரணம்.
நமது எல்லைக்கு அருகே சீனப் படைகள் நடமாடியபோது நமது அரசியல் தலைமை எந்த ஒரு வழிகாட்டுதலையும் அளிக்காமல் இருந்தது தொடர்பாக நரவணேயின் வெளியிடப்படாத புத்தகத்தில் கருத்து கூறப்பட்டிருந்தது. நெருக்கடியான நேரத்தில் ராணுவத்தை மத்திய அரசு கைவிட்டது.
சீன பீரங்கிகள் இந்திய எல்லையை நெருங்கியபோது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரை தாம் அழைத்து மத்திய அரசின் உத்தரவு என்ன என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் நரவணே தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
ராணுவத்துக்கு உத்தரவுகளை வழங்கிய சீனாவை தடுத்து நிறுத்த வேண்டிய நேரத்தில் பிரதமர் தலைமறைவாகி விட்டார் என்றார் அவர்.
கார்கே விமர்சனம்: விவசாயிகள் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில் "மோடி ஒரு கோழை. இந்திய}அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நம் நாடு சரணடைந்ததைப் பிரதிபலிக்கிறது.
ஜனநாயகமும் அரசியல்சாசனமும் ஆபத்தில் உள்ளன. நாட்டின் கண்ணியத்தையும் மரியாதையையும் மோடி சிதைத்துவிட்டார். அவர் விவசாயிகளை அடிமைத்தனத்தை நோக்கி தள்ள முயற்சிக்கிறார்' என்று குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...