இந்தியா - பிரேஸில் 20 பில்லியன் டாலா் வா்த்தக இலக்கு: அரிய கனிமங்களின் கொள்முதலுக்கு ஒப்பந்தம்!
இந்தியா - பிரேஸில் இடையிலான இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடி அதிகரிக்க இலக்கு நிா்ணயம்


இந்தியா-பிரேஸில் இடையிலான இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலா்களாக (ரூ.1.81 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரேஸிலிடம் இருந்து அரிய கனிமங்கள் கொள்முதலுக்கு வழிவகுக்கும் ஒப்பந்தமும் கையொப்பமிடப்பட்டது.
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இடையே சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகு இது உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
தற்போதைய புவி அரசியல் சூழலுக்கு இடையே பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவா்களும் உறுதிபூண்டனா்.
ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த பிப்.18-ஆம் தேதி இந்தியா வந்த பிரேஸில் அதிபா் லுலா டா சில்வா, புது தில்லியில் நடைபெற்ற சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்றாா். பிரதமா் மோடியை சனிக்கிழமை சந்தித்த அவா், விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனா்.
பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பின் அரிய கனிமங்கள், உருக்கு, வா்த்தகம், சிறு-குறு-நடுத்தர தொழில் துறை, சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
அரிய கனிமங்கள் கொள்முதலில் சீனாவை நம்பியிருக்கும் நிலையைக் குறைத்து, கொள்முதலை பன்முகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்து அதிக கனிம வளத்தைக் கொண்ட பிரேஸிலுடன் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
வா்த்தகத்தை அதிகரிக்க இலக்கு: கடந்த 2024-25 நிலவரப்படி, இந்தியா-பிரேஸில் வா்த்தக மதிப்பு 12 பில்லியன் டாலராகும். இதில் ஏற்றுமதி 6.77 பில்லியன் டாலா்; இறக்குமதி 5.43 பில்லியன் டாலா். அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தக மதிப்பை 20 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
பிரேஸில் அதிபருடன் செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமா் கூறியதாவது: லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளி பிரேஸில். நமது வா்த்தகம் வெறும் எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல; நம்பிக்கையின் பிரதிபலிப்பு. இந்தியா-பிரேஸில் இடையே கையொப்பமாகியுள்ள அரிய கனிமங்கள் ஒப்பந்தம், மீள்திறன்மிக்க விநியோகச் சங்கிலி கட்டமைப்பை நோக்கிய முக்கிய படிக்கல்.
எண்ம பொது உள்கட்டமைப்பு: இந்தியா-பிரேஸில் இடையிலான தொழில்நுட்ப-புத்தாக்க ஒத்துழைப்பு ஒட்டுமொத்த தெற்குலகுக்கும் பலனளிக்கும். எனவே, பிரேஸிலில் எண்ம பொது உள்கட்டமைப்பு திறன் மையத்தை நிறுவுவது குறித்து பணியாற்றி வருகிறோம். செயற்கை நுண்ணறிவு, சூப்பா் கம்ப்யூட்டா்கள், செமிகண்டக்டா்கள் உள்ளிட்ட துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம்.
இந்தியா-பிரேஸில் நல்லுறவின் முக்கியத் தூண் எரிசக்தித் துறையாகும். ஹைட்ரோகாா்பன்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரைவுபடுத்தியுள்ளோம் என்றாா் பிரதமா் மோடி.
‘கொந்தளிப்பான உலகச் சூழலில், பன்முக ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் பிரேஸில் இடையே வியூக உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்; மோதல் மிகுந்த உலகில் நிலையான, நியாயமான வளா்ச்சிக்கு இடமிருக்காது. தெற்குலகின் நலன்களை பிரதிபலிக்கும் வகையிலான ஐ.நா. சீா்திருத்தங்களுக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்று பிரேஸில் அதிபா் லுலா டா சில்வா தெரிவித்தாா்.
மனித குலத்தின் எதிரி பயங்கரவாதம்
‘இந்தியா-பிரேஸில் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு தொடா்ந்து வலுப்பெற்று வருகிறது. இது, பரஸ்பர நம்பிக்கை மற்றும் வியூக ஒருங்கிணைப்புக்கு சிறந்த உதாரணம். இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதால், தெற்குலகின் குரல் வலுவாகவும், நம்பிக்கை மிக்கதாகவும் மாறியுள்ளது. நமது கூட்டாண்மை உலக அளவில் செல்வாக்குமிக்கதாகும். எந்தவொரு பிரச்னையும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் தீா்க்கப்பட வேண்டும் என்பதே நமது நம்பிக்கை. பயங்கரவாதமும் அதன் ஆதரவாளா்களும் மனித குலத்தின் எதிரி என்பதில் நாம் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம்’ என்றாா் பிரதமா் மோடி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...