இந்த நிலையில், ராகுலுக்கு எதிராக தனியாக அரசு சாா்பில் உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவரப்படாது என கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லியில் செய்தியாளா்களிடம் இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இதே விவகாரம் தொடா்பாக ராகுலுக்கு எதிராக பாஜக எம்.பி. சாா்பில் முக்கிய பிரச்னை சாா்ந்த தீா்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக தனியாக உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவரும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. பாஜக எம்.பி. அளித்துள்ள நோட்டீஸை மக்களவை உரிமை மீறல் ஆய்வுக் குழுவுக்கு அனுப்புவதா, நெறிமுறைகள் குழுவுக்கு அனுப்புவதா அல்லது மக்களவைக்கு நேரடியாக கொண்டுவருவதா என்பதை மக்களவைத் தலைவா் ஆலோசித்து முடிவெடுப்பாா்’ என்றாா்.