டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார்: மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்டுக் கொண்டால் அதன் தலைவர் பதவியில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன் என்று மோகன் பாகவத் தெரிவித்தார்.

News image
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்- கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 11:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்டுக் கொண்டால் அதன் தலைவர் பதவியில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன் என்று மோகன் பாகவத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து மோகன் பாகவத் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தலைமை தாங்கும் நபர் எப்போதும் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு ஹிந்துவாக இருப்பார். சிறந்த நபருக்கு இந்தப் பதவி அளிக்கப்படும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுவதில்லை. அமைப்பின் பிராந்திய மற்றும் வட்டாரத் தலைவர்கள் ஒன்றுகூடி தலைவரை நியமிப்பார்கள். பொதுவாக, 75 வயதை எட்டியதும் யார் ஒருவரும் எந்தப் பதவியையும் வகிக்காமல் பணியாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

எனக்கு 75 வயது ஆகிவிட்டது. நான் இத்தகவலை ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் தெரிவித்து விட்டேன். ஆனால், தொடர்ந்து பணியாற்றுமாறு அமைப்பு என்னிடம் கூறிவிட்டது.

தலைவர் பதவியை விட்டு விலகுமாறு அமைப்பு எப்போது கேட்டுக் கொண்டாலும் பதவியை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். ஆனால் சங்கப் பணியிலிருந்து ஓய்வு என்பது கிடையாது.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரதிநிதித்துவம் இருப்பதில்லை. அதன் தன்னார்வலர்கள் தங்களின் பணியின் அடிப்படையில் உயர் பதவிக்கு வருகின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டபோது பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய ஒரு சமூகத்தில் அதன் பணி தொடங்கியது.

அதனால்தான் அதன் நிறுவனர்களில் பலரும் பிராமணர்களாக இருந்தனர். அதனால்தான் அந்த நேரத்தில் பிராமணர் அமைப்பு என்று அதற்கு முத்திரை குத்தப்பட்டது.

எஸ்சி, எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராகவர முடியுமா? என்ற கேள்விக்கு என்னால் திட்டவட்டமான பதிலைக் கூற முடியவில்லை. ஏனெனில் அந்த முடிவு, அமைப்பின் தலைவரை நியமிப்பவர்களைச் சார்ந்தது.

அமைப்புக்கு ஒரு தலைவரை நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் இருப்பவர்களிலேயே சிறந்த நபரை நான் தேர்வு செய்வேன். நான் ஆர்எஸ்எஸ் தலைவராக நியமிக்கப்பட்டபோது அப்பதவிக்கு தகுதிவாய்ந்த பல்வேறு நபர்கள் இருந்தனர். எனினும், அவர்கள் தங்கள் பணியில் மும்முரமாக இருந்தனர்.என்னை எனது கடமைகளில் இருந்து விடுவித்த பின், தலைவர் பதவியில் நியமித்தனர்..

ஆர்எஸ்எஸ் தலைவர் பதவிக்கு வர ஒருவர் எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சேர்ந்தவராக இருப்பது ஒரு தகுதியின்மையும் கிடையாது; பிராமணராக இருப்பது ஒரு தகுதியும் கிடையாது.

நாட்டில் அனைவரையும் நம்பிக்கையையும் பெற்றபின் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அந்த நடவடிக்கையால் வேறுபாடுகள் ஏற்படக் கூடாது.

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்பது இரு தரப்பினருக்கும் வெற்றியைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால் நமக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.

ஹிந்துத்துவ சித்தாந்தவாதி வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்துக் கேட்கிறீர்கள். அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டால் அதன் பெருமை மேலும் உயரும்.

ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களின் கடின உழைப்பு காரணமாக அமைப்புக்கு நல்ல காலம் வந்துள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.