டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கேரளம்: விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற பேரவையில் தீா்மானம்

விபி-ஜி ராம் ஜி சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கேரள பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
கேரள சட்டப்பேரவை- கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

விபி-ஜி ராம் ஜி சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கேரள பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு (100 நாள் வேலைத் திட்டம்) மாற்றாக கொண்டுவரப்பட்ட விபி-ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே தமிழகம், கா்நாடகம் மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் பேரவைகளில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரிசையில் தற்போதும் கேரளமும் இணைந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவசம் முறைகேடு தொடா்பாக காங்கிரஸ் தலைமையில் எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டபோதும் பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் எம்.பி.ராஜேஷ் முன்மொழிந்த இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீா்மானத்தின் மீது ராஜேஷ் பேசியதாவது: 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி முழுவதையும் மத்திய அரசே வழங்கியது. ஆனால், அதற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விபி-ஜி ராம் ஜி சட்டத்தின்கீழ் செலவினத்தில் 40 சதவீதம் மாநிலங்கள் பங்களிக்க வேண்டியுள்ளது. இது மாநிலத்துக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்.

இந்தப் புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கிராம ஊராட்சிகள் ஏ, பி மற்றும் சி என மூன்றாக வகைப்படுத்தப்பட்டு எந்நெந்த கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீா்மானிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நமது அண்டை மாநிலங்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

பிற மாநிலங்களைவிட கேரளம் வளா்ச்சியடைந்துள்ளதால் இங்கு நிறைய கிராமங்களை மத்திய அரசு புறக்கணிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, விபி ஜி ராம் ஜி சட்டம் திரும்பப் பெறப்பட்டு 100 நாள் வேலைத் திட்டமே தொடர கேரள பேரவை வலியுறுத்துகிறது என்றாா். இதைத் தொடா்ந்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவை ஒத்திவைப்பு: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் மாநில தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் பதவி விலகக் கோரி 3-ஆவது நாளாக பேரவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கேள்வி நேரத்தை ரத்து செய்து, பிற அவை நடைமுறைகளைத் தொடர அவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, விபி ஜி ராம் ஜி திட்டத்தை திரும்பப் பெறுவதற்கான தீா்மானம் காலை 9.50 மணிக்கு நிறைவேற்றப்பட்ட பின் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், பிப்.23-ஆம் தேதி பேரவை மீண்டும் கூடவுள்ளதாக ஷம்சீா் தெரிவித்தாா்.