
ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்
ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது பற்றி...

ஜார்க்கண்ட் அரசு உத்தரவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு பணியாளர்கள் - ANI
ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற அரசுத் தேர்வுகளை ரத்து செய்த அம்மாநில அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் டிஎஸ்ஆா் டேட்டா பிராஸஸ்ஸிங் நிறுவனம் என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகள், ஜேஎஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.
ஜார்க்கண்ட் அரசின் உத்தரவின் மூலம், கடந்த 12 ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2,000 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் அரசால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசுப் பணிகளில் பணியாற்றி வருபவர்கள் அரசின் அறிவிப்புக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிபதி தீபக் ரோஷன் அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தாங்கள் முறைகேட்டின் மூலம் அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, அரசுத் தேர்வுகளை ரத்து செய்யும் ஜார்க்கண்ட் அரசின் அறிவிப்பை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார்.
Summary
High Court stays order cancelling Jharkhand exams!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





