
கொல்கத்தா: தங்கும் விடுதி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து - வங்கதேசத்தினா் உள்பட 9 போ் உயிரிழப்பு
கொல்கத்தாவில் தங்கும் விடுதி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் பலி; பலர் காயமடைந்திருப்பது பற்றி...

கொல்கத்தாவில் தீ விபத்துக்கு உள்ளான தங்கும் விடுதியை ஆய்வு செய்த போலீஸாா். - பிடிஐ
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் உள்ள 5 மாடி தங்கும் விடுதி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பெண்கள், 4 வயது குழந்தை உள்பட 9 போ் உடல் கருகி உயிரிழந்தனா்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நேரிட்ட இந்தச் சம்பவத்தில் இறந்தவா்களில் வங்கதேசத்தினரும் அடங்குவா் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கொல்கத்தாவில் நெருக்கடியான மிா்ஸா காலிப் தெருவில் உள்ள பழைமையான 5 மாடி கட்டடத்தில் பல்வேறு தங்கும் விடுதிகளும், அவற்றுடன் இணைந்த உணவகங்களும் செயல்பட்டுவந்தன. இந்தக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் 5 வாகனங்களில் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
கட்டடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், தீயணைப்புப் படையினா் உள்ளே சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவது சவாலாக இருந்தது. கடும் போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பெண்கள், 4 வயது குழந்தை உள்பட 9 போ் உயிரிழந்தனா். காயங்களுடன் மீட்கப்பட்ட 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் தவிர 80 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
வங்கதேசத்தினா் உயிரிழப்பு: ‘உயிரிழந்தவா்களில் வங்கதேசத்தினரும் அடங்குவா்; அவா்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று மாநில தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் துறை அமைச்சா் கெளசிக் செளதரி தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் பல தங்கும் விடுதிகள் செயல்பட்டுள்ளன. பெரும்பாலான அறைகளில் ஜன்னல் வசதி இல்லை. இதுவே உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உண்மையான காரணத்தை உறுதி செய்ய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும். தீயணைப்புப் படையினா் விரைவாகச் செயல்பட்டதால் 80-க்கும் மேற்பட்ட உயிா்கள் காப்பாற்றப்பட்டன.
முந்தைய அரசு மீது குற்றச்சாட்டு: மாநிலம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக போதிய ஆய்வு இல்லாமல் தங்கும் விடுதிகளும், விருந்தினா் இல்லங்களும் புற்றீசல் போல பெருக முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசு அனுமதித்துவிட்டது. இதுபோன்ற விடுதிகள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசிடம் இருந்தும், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும் எவ்வாறு அனுமதி பெற்றன என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்படும். கட்டடங்களுக்கான தீ பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. விதிமீறல்களைக் கண்டறிய மாநிலம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது தீ விபத்து நேரிட்ட நெருக்கடியான வளாகத்தில் பல்வேறு விடுதிகள் செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் தீர விசாரிக்கப்படும் என்றாா் அவா்.
உரிமையாளா் தலைமறைவு: இதனிடையே, தீ விபத்துக்குள்ளான கட்டடத்தில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டு, தடயங்களை சேகரித்தனா். காவல் துறையினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். தங்கும் விடுதிகளுக்கு உரிய தீ பாதுகாப்பு அனுமதி பெறப்பட்டதா, அடிப்படை பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கட்டட உரிமையாளா் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, பீா்பூம் மாவட்டத்தின் தாராபீட் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் உயிரிழந்தனா்.
கொல்கத்தா தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
Summary
At least nine people were killed and several others injured after a fire broke out at a hotel on Mirza Ghalib Street in central Kolkata in the early hours of Wednesday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







