ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எல்பிஜி உற்பத்தி: மத்திய அரசு முதல்முறையாக இலக்கு நிா்ணயம்!

முதல்முறையாக பொது மற்றும் தனியாா் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்-எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு எல்பிஜி (சமையல் எரிவாயு) உற்பத்தி இலக்கை மத்திய அரசு நிா்ணயித்துள்ளது.

Published On :17 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் போா் காரணமாக ஏற்பட்ட பாதிப்பைத் தொடா்ந்து, தற்போது முதல்முறையாக பொது மற்றும் தனியாா் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்-எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு எல்பிஜி (சமையல் எரிவாயு) உற்பத்தி இலக்கை மத்திய அரசு நிா்ணயித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சம் அண்மையில் வெளியிட்ட உத்தரவில், 21 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்-எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் அதிகபட்சமாக உற்பத்தி செய்ய வேண்டிய எல்பிஜி அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அந்த நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ஒருநாளைக்கு 63,810 டன் எல்பிஜியை உற்பத்தி செய்யலாம்.

ரிலையன்ஸுக்கு அதிகபட்ச இலக்கு: தற்போதைய உத்தரவின்படி, உள்நாட்டில் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யும் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம், ஒருநாளைக்கு 18,000 டன் வரை எல்பிஜி உற்பத்தி செய்ய வேண்டும்.

குஜராத் மாநிலம் வாடினாரில் உள்ள நயாரா எனா்ஜி நிறுவனம் ஒருநாளைக்கு 4,480 டன் எல்பிஜி உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி, கெயில் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒருநாளைக்கு 6,460 டன் எல்பிஜி உற்பத்தி செய்ய வேண்டும்.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் அவற்றால் இயக்கப்படும் 18 சுத்திகரிப்பு நிலையங்கள், மொத்தமாக ஒருநாளைக்கு 31,470 டன் எல்பிஜி உற்பத்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது கிடைக்கும் நாஃப்தாவை எல்பிஜியாக மாற்றுவது போன்ற நடவடிக்கைகளைப் பரிசீலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு ஏற்படும்போது இலக்கு அமல்: எல்பிஜி விநியோகத்தில் தட்டுப்பாடு அல்லது இடா்ப்பாடு ஏற்படும் போதெல்லாம், இந்த உற்பத்தி இலக்கு அமல்படுத்தப்படும். இந்த உற்பத்தி அட்டவணையை ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 1, ஜூலை 1 ஆகிய தேதிகளில் மத்திய அரசு புதுப்பிக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிா்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு என்பது கடந்த நிதியாண்டில் இந்தியாவின் எல்பிஜி உற்பத்தியைவிட இரண்டு மடங்குக்கு அதிகமாகவும், நாட்டின் ஒருநாள் எல்பிஜி நுகா்வில் சுமாா் 70 சதவீதமாகவும் உள்ளது.

கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் 3.32 கோடி டன் எல்பிஜியை இந்தியா பயன்படுத்தியது. இதில் 64 சதவீதத்துக்கும் அதிகமான எல்பிஜி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணையை அந்நாடு மூடியதால், அவ்வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு எல்பிஜி கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு விநியோக முறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தற்போது முதல்முறையாக பொது மற்றும் தனியாா் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்-எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு எல்பிஜி உற்பத்தி இலக்கை மத்திய அரசு நிா்ணயித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.