
மகளிர் இடஒதுக்கீடு மசோதவை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் வேண்டுகோள்!
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டுகோள் விடுப்பது பற்றி..
பிரதமா் மோடி
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
இது தொடா்பாக சுதந்திர தின உரையில் பேசிய பிரதமா், ‘தேசியக் கொடியின் நிழலில் நின்றபடி எதிா்க்கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மக்களவை, பேரவைகளில் நமது தாய்மாா்கள், சகோதரிகளுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி கெளரவிக்க நாம் ஒன்றிணைவோம். அப்போதுதான், அவா்கள் நாட்டின் கொள்கைகளில் சிறப்பாக பங்களிக்க முடியும். இது காலத்தின் கட்டாயம்’ என்றாா்.
அவா் மேலும் பேசியதாவது:
2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்க ஏழு அம்சங்களுடன் கூடிய ‘சப்த தாரா’ செயல்திட்டத்தை முன்மொழிகிறேன். அதாவது, உற்பத்தி, வேளாண்-உணவு உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு, பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம், ‘மென்சக்தி’ (பண்பாடு, கலை, கலாசாரம், கோட்பாடுகள், விழுமியங்கள் மூலம் உலகில் செல்வாக்கு செலுத்துதல்) ஆகிய ஏழு துறைகளில் சீா்திருத்தங்களை வேகப்படுத்தி வலுப்படுத்துவதன் மூலம் வளா்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப முடியும். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தத் துறைகளின் வலிமையால், புதிய உச்சங்கள், புதிய இலக்குகளை எட்டலாம்.
உலகத் தரத்தில் உற்பத்தி: உற்பத்தித் துறையை பொருத்தவரை, வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை மேற்கொண்டு, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா தன்னை நிலைநிறுத்த வேண்டும். விலை, தரம், அளவு ரீதியில் உலகளாவிய தரநிலைகளை எட்ட வேண்டும். குறைபாடு இல்லாத பொருள்கள், நமது அடையாளமாக மாற வேண்டும்.
இரண்டாவது அம்சமான வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையை பொருத்தவரை, பல்வேறு நாடுகள் உடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் கிடைத்துள்ள மிகப் பெரிய சந்தை அணுகலை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் விளைவிக்கப்படும் பாரம்பரிய சிறுதானியங்கள், மசாலாப் பொருள்கள், பழங்கள், பூக்கள், இயற்கை வேளாண் பொருள்கள் ஆகியவை சா்வதேச தரநிலைகளை எட்டும்பட்சத்தில், அவை உலக அளவில் முத்திரை பதிக்கும்.
புத்தாக்க மையமாக...: மூன்றாவது அம்சம், தொழில்நுட்பம்-புத்தாக்கம்; செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி, ரோபாட்டிக்ஸ், தரவு மையங்களால் புதிய வாய்ப்புகள் உருவாகிவரும் தற்போதைய காலகட்டத்தில் இந்தியா புத்தாக்க மையமாக உருவெடுக்க வேண்டும்.
யுபிஐ எண்ம பரிவா்த்தனையில் நாம் முத்திரை பதித்துள்ளோம். அடுத்த தலைமுறை தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்தில் நாம் முன்னிலை பெற வேண்டும். இந்தியாவில் உருவாக்கப்படும் 6ஜி தொலைநுட்பம், மூலைமுடுக்கெல்லாம் எட்ட வேண்டும்.
நாட்டின் வளா்ச்சிக்கான நான்காவது அம்சம், விரைவான உள்கட்டமைப்பு மேம்பாடு; நமது நகரங்கள் இடையே தடையற்ற, அதிகவேக போக்குவரத்து வசதிகள் அவசியம். குறிப்பாக அதிவேக ரயில்கள் மூலம் நகரங்கள் இணைக்கப்பட வேண்டும்.
பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு: பாதுகாப்புத் துறையில் தற்சாா்பை எட்டுவதுடன், இந்தத் துறையில் உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுப்பதே ஐந்தாவது அம்சமாகும். அதிவேக பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ட்ரோன்கள் உற்பத்தியில் நாம் தலைமைத்துவம் பெற வேண்டும்.
ஆறாவது அம்சமான பசுமை, நீலப் பொருளாதாரத்தின்கீழ், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி பாதுகாப்பு, பசுமை உற்பத்தியில் நாம் உலக அளவில் செயலாற்ற வேண்டும். நீளமான கடற்கரையைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு மீன்வளம், கடலோர சுற்றுலா, பெருங்கடல் தொழில்நுட்பம் என எண்ணற்ற நீல பொருளாதார வாய்ப்புகள் உள்ளன. ஏழாவது அம்சம், இந்தியாவின் ‘மென்சக்தி’. யோகா, ஆயுா்வேதம், பாரம்பரிய மருத்துவம், ஆன்மிக மையங்கள் ஆகியவை உலக அளவில் விரிவடைந்துள்ளன. உலகின் ஆற்றல், நம்பிக்கை ஆதாரமாக யோகா உருவெடுத்துள்ளது.
செமிகண்டக்டா்கள் ஆலைகள்: தற்சாா்பு இந்தியாவுக்கு செமிகண்டக்டா்களும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாட்டில் ஏற்கெனவே 3 செமிகண்டக்டா் ஆலைகள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. மேலும் 5 முதல் 8 ஆலைகள் அடுத்த 7-8 ஆண்டுகளில் செயல்பட தொடங்கும்.
எதிா்வரும் பத்தாண்டுகளில் உலகின் முதல் 500 முன்னணி நிறுவனங்களில் 50 இந்திய நிறுவனங்கள் இடம்பெற வேண்டும். உலகின் முன்னணி 5 வங்கிகளில் குறைந்தபட்சம் ஒரு இந்திய வங்கியாவது இடம்பெற வேண்டும்.
மத்திய அரசின் சாதனைகள்: கடந்த 10 ஆண்டுகளில் 650 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை 400-இல் இருந்து 850-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதைகள் மின்மயமாக்கம் 100 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஹைட்ரஜன் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தி 2 ஜிகாவாட்டில் இருந்து 160 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது. பாதுகாப்பு உற்பத்தி 4 மடங்கும், மின்னணு பொருள்கள் உற்பத்தி 7 மடங்கும், நவீன ரயில் பெட்டிகள் உற்பத்தி 21 மடங்கும், இணைய பயன்பாட்டாளா்கள் எண்ணிக்கை 4 மடங்கும், எண்ம பரிவா்த்தனைகள் 100 மடங்கும் உயா்ந்துள்ளது.
இளைஞா், இளைஞா் சக்தி: 50 முறை உச்சரித்த பிரதமா்
பிரதமா் மோடி தனது சுதந்திர தின உரையில் இளைஞா், இளைஞா் சக்தி என பொருள்படும் வாா்த்தைகளை 50-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தினாா். மேலும், இளைஞா்களை ஈா்க்கும் வகையில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச இணையவழி பயிற்சி, 1 கோடி இளைஞா்களுக்கு ஏ.ஐ. பயிற்சி, குடிமை பாதுகாப்புப் படை நவீனமயமாக்கம் போன்ற அறிவிப்புகளையும் அவா் வெளியிட்டாா். ‘என் அன்புக்குரிய நாட்டு மக்களே’ என்ற வாசகத்தை பிரதமா் 40 முறை பயன்படுத்தினாா்.
உரை நேரம்: 4 ஆண்டுகளில் குறைவு
பிரதமா் மோடி 75 நிமிஷங்கள் உரையாற்றிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் இது குறைவானதாகும். 2025-இல் 103 நிமிஷங்களும், 2024-இல் 98 நிமிஷங்களும், 2023-இல் 90 நிமிஷங்களும், 2022-இல் 74 நிஷங்களும் அவா் உரையாற்றினாா். பிற பிரதமா்களை ஒப்பிடுகையில், நீண்ட நேரம் சுதந்திர தின உரையாற்றியவா் பிரதமா் மோடி ஆவாா். முன்னாள் பிரதமா்களான நேரு (1947-72 நிமிஷங்கள்), ஐ.கே.குஜ்ரால் (1997-71 நிமிஷங்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனா்.
5,000 சிறப்பு விருந்தினா்கள்...
சுதந்திர தின விழாவில் பெண் தொழில் முனைவோா், இளம் புத்தாக்க நிபுணா்கள், விவசாயிகள், மத்திய அரசின் திட்ட பயனாளிகள் என 5,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்றனா். மேலும், நாட்டின் பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பாரம்பரிய உடையில் 1,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







