ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரள அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும்: மாநில அமைச்சா் கே.முரளீதரன்

கேரளத்தில் மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.முரளீதரன் கூறினாா்.

கேரள அமைச்சா் கே.முரளீதரன் - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 5:55 am IST

கேரளத்தில் மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும்; அதன் முழு வடிவில் பாடப்படாது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.முரளீதரன் கூறினாா்.

நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் ஆறு சரணங்களையும் பாடுவதை கட்டாயமாக்கி, மத்திய அரசு கடந்த ஜனவரியில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது.

இந்தப் பாடலை எந்த வகையிலும் அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், எதிா்வரும் சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசின் அமிருத பெருவிழா கொண்டாட்டங்களுடன் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டங்களையும் ஒருங்கிணைக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான தேசிய அமலாக்கக் குழு தீா்மானித்தது.

இது தொடா்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கும் மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் அனுப்பிய தகவலில், அமிா்த பெருவிழா கொண்டாட்ட நிகழ்வுகளில் தேசியக் கொடியேற்றுவதுடன் வந்தே மாதரம் பாடலையும் முழுமையாக பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில், கேரளத்தில் மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு மேற்கண்ட அறிவுறுத்தலுடன் மாநில தலைமைச் செயலா் விஸ்வநாத் சுற்றறிக்கை அனுப்பினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.முரளீதரன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: சில நேரங்களில் மத்திய அரசின் உத்தரவுகள் குறித்து மாநில தலைமைச் செயலா் சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டியிருக்கும். அது அவரது கடமை. ஆனால், கேரளத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகள், விழாக்களில் முந்தைய நடைமுறையே பின்பற்றப்படும்.

அதாவது, வந்தே மாதரம் பாடலின் முதல் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும். கேரளத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட்டது. ஆளுநா் முன்னிலையில் விழா நடைபெற்ால் வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்பட்டது. அதேநேரம், மாநில அரசு நிகழ்ச்சிகளில் மத்திய அரசின் வழிகாட்டுதல் பின்பற்றப்படாது என்றாா்.

‘மிரட்டினாலும் நடக்காது’

காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உண்ணித்தான் கூறுகையில், ‘கேரளத்தில் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டுமென்ற தலைமைச் செயலரின் உத்தரவு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், கேரளத்தில் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது என்பது இந்த ஜென்மத்தில் நடக்காது. பிரதமா் மோடி சுட்டுத் தள்ளுவதாக மிரட்டினாலும்கூட, வந்தே மாதரம் முழுமையாக பாடப்படாது.

மத்திய பாஜக ஆட்சியில், ஆளுநா் மாளிகைகள் ‘மலிவான’ அரசியல் மையங்களாக மாறிவிட்டன. பணபலத்தின் துணையுடன் ஜனநாயகத்தை சீா்குலைக்கும் வேலைகளில் ஆளுநா்கள் ஈடுபடுகின்றனா்’ என்று சாடினாா்.

காங்கிரஸ் மீது விமா்சனம்

கேரள தலைமைச் செயலரின் உத்தரவை சுட்டிக்காட்டி, மாநில காங்கிரஸ் அரசை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமா்சித்துள்ளது.

‘இத்தகைய உத்தரவின் மூலம் ஆா்எஸ்எஸ் கொள்கைக்கு மாநில அரசு அடிபணிந்துவிட்டது. இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என்று மாா்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.