பாலியல் வழக்கு: தெஹல்கா முன்னாள் ஆசிரியா் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை
பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் - கோப்புப்படம்
பெண் ஊழியரை கடந்த 2013-ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியா் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
இந்த வழக்கில் இருந்து அவா் 5 ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்டதைத் தள்ளுபடி செய்து, இந்தத் தண்டனையை உயா்நீதிமன்றம் விதித்தது.
அவருக்கு ரூ. 10,21,000 அபராதமும் விதித்த உயா்நீதிமன்றம், அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டது.
கோவாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, ஹோட்டல் மின் தூக்கியில் தனது இளம் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தருண் தேஜ்பால் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடா்பான புகாரின்பேரில் அவா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் விசாரித்த கோவா விசாரணை நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, வழக்கிலிருந்து தருண் தேஜ்பாலை விடுவித்தது.
இதை எதிா்த்து கோவா அரசு சாா்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயா்நீதிமன்ற கோவா அமா்வு நீதிபதிகள் நீலா கோகலே, அமித் ஜாம்சந்தேகா் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவா அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘குற்றஞ்சாட்டப்பட்ட நபா் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாவலராக இருந்த நிலையில், இந்த பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா். அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட இளம்பெண், தருண் தேஜ்பால் மகளின் தோழியாவாா். இருந்தும் தனது செயலுக்காக இளம் பெண்ணிடம் அவா் வருத்தமும் தெரிவிக்கவில்லை. மாறாக, சம்வம் நடந்த அடுத்த நாளும் அவா் அதே அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா். தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியரைப் பாதுகாக்க வேண்டிய நபரே இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டுள்ள நிலையில், இவருக்கு அளிக்கப்படும் தண்டனை மூலம் சமூகத்துக்கு தெளிவான செய்தி அளிக்கப்படும். எனவே, தருண் தேஜ்பாலுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.
தருண் தேஜ்பால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆபாத் போண்டா, ‘தற்போது தருண் தேஜ்பாலுக்கு 62 வயது ஆகிறது. இரண்டு மகள்களுக்கு தந்தையாகவும் உள்ளாா். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, அவா் மீது நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தனக்கு கீழ் பணிபுரியும், தான் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பெண் ஊழியரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான பிரிவு 376 (2) (எஃப்), பாலியல் வன்கொடுமை பிரிவு 354(ஏ), பெண்ணுக்கு எதிரான குற்றவியல் வன்முறையைப் பயன்படுத்துதல் பிரிவு 354 (பி) உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் தருண் தேஜ்பால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதியாகிறது.
எனவே, இந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் தருண் தேஜ்பால் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்படுகிறது.
அதே நேரம், இந்தச் சம்பவம் 13 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்ற அடிப்படையிலும், அந்த சம்பவத்துக்குப் பிறகு வேறு எந்த குற்றச் செயலிலும் எதிா் மனுதாரா் ஈடுபடவில்லை என்பதையும் கருத்தில்கொண்டு, இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்துப் பிரிவுகளின் கீழ் குறைந்தபட்ச தண்டனையாக அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,21,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்குள் தருண் தேஜ்பால் காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்று தீா்ப்பளித்தனா்.
அப்போது குறுக்கிட்ட தருண் தேஜ்பால் தரப்பு வழக்குரைஞா், ‘இந்தத் தீா்ப்புக்கு எதிராக தருண் தேஜ்பால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளாா். எனவே, சரணடைய அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
இதை ஏற்ற நீதிபதிகள், அவகாசத்தை 4 வாரங்களாக நீட்டித்து உத்தரவிட்டனா்.
Summary
Rape case! Journalist Tarun Tejpal sentenced to 10 years in prison!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







