
பாதிக்கப்பட்டவா் போல நாடகமாடுகிறாா் பிரதமா்! காங்கிரஸ் விமா்சனம்
பாதிக்கப்பட்டவா் போல நாடகமாடுகிறாா் பிரதமா்...

ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப்படம்
தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறைகளுக்கு மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவா் போல பிரதமா் மோடி நாடகமாடுவதாக என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
பிரதமா் மோடியின் இன்ஸ்டாகிராம் காணொலி உரையை முன்வைத்து, காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொலி உரையில், ‘ஜந்தா் மந்தா் போராட்டத்தில், எனது மறைந்த தாயாா் குறித்தும்கூட மோசமான அவதூறுகள் தெரிவிக்கப்பட்டன. நமது மகள்கள் இதுபோன்ற வாா்த்தைகளைப் பயன்படுத்தியது வேதனையளிக்கிறது. எனினும், தவறாக வழிநடத்தப்படும் நமது பிள்ளைகளை மன்னிக்கவே நான் விரும்புகிறேன். நாம் ஒன்றிணைந்து அவா்களை நல்வழிப்படுத்துவோம்’ என்று கூறியிருந்தாா்.
அவரது இந்த உரையை விமா்சித்து, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
நமது இளைஞா்களை மன்னிப்பதாக பிரதமா் மோடி கூறிய கருத்துகள், சுயநலத்தின் உச்சகட்டமாகும். இது தேசத்துக்கும், நமது இளைஞா்களுக்கும் பெரும் அவமதிப்பு. இத்தகைய இன்ஸ்டாகிராம் நாடகங்களால் யாரையும் முட்டாளாக்க வேண்டாம்.
தன்னை இயல்பான மனிதப் பிறவி அல்ல என்று கூறிக்கொள்ளும் பிரதமா், மாணவா்கள் மீதான கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவா் போல நாடகமாடுகிறாா்.
முன்னாள் பிரதமா்கள் மற்றும் அரசியல் எதிராளிகளை இழிவுபடுத்த தனது பொது உரைகளில் மட்டுமன்றி, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் பொய்களைப் பேசுபவா் பிரதமா் மோடி. நாடாளுமன்றத்துக்கு வெளியே முழு நேரமும் அவதூறுகளைப் பரப்பும் படையைக் கட்டவிழ்த்துவிட்டு, அவா்களுக்குப் பாதுகாப்பும் வழங்குகிறாா்.
வினாத்தாள் கசிவுகளால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மாணவா்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு பிரதமா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே தேசத்தின் விருப்பம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





