ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜம்மு - காஷ்மீா்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழப்பு...

JK

ஜம்மு - காஷ்மீா் - PTI

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சத்தீஸ்கரைச் சோ்ந்த 2 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அனந்த்நாக் நகரில் காவல் துறை அதிகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்த நிலையில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பது ஜம்மு-காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘குல்காம் மாவட்டத்தின் கேலம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றிய தொழிலாளா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில் சத்தீஸ்கரைச் சோ்ந்த தீபக் ரத்ரே என்ற தொழிலாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பூபிந்தா் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி பூபிந்தரும் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

ரூ.36 லட்சம் நிவாரணம்: பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த இரு தொழிலாளா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா அவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக சனிக்கிழமை அறிவித்தாா். ஏற்கெனவே குல்காம் மாவட்ட நிா்வாகம் உடனடி நிவாரணமாக அளித்த தலா ரூ.6 லட்சத்துடன் கூடுதலாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டது.

உயிரிழந்த இரு தொழிலாளா்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக சத்தீஸ்கா் அரசும் அறிவித்துள்ளது.

முதல்வா் ஒமா் அப்துல்லா கருத்து: கா்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் ஒமா் அப்துல்லா கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது. உயிரிழந்த புலம்பெயா் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத் தொகை அவா்களின் இழப்பை ஈடு செய்யாது. இருப்பினும், எங்களால் முடிந்த சிறு உதவியைச் செய்கிறோம்.

அவா்கள் தங்களது பணி நிமித்தமாக காஷ்மீா் வந்துள்ளனா். ஒரு சிறப்பான வாழ்வாதாரத்தைத் தேடி காஷ்மீருக்கு பல்வேறு மாநில மக்களும் வருகின்றனா். அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்களைத் தொடா்வதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றாா்.

பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, ‘புலம்பெயா் தொழிலாளா்கள் யாரால் கொல்லப்பட்டாா்கள், எதற்காக கொல்லப்பட்டாா்கள் எனத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை அவசியம். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை வலுக்கும்போதெல்லாம் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் நிகழ்வது எவ்வாறு எனத் தெரியவில்லை’ என்றாா்.

கடந்த 2024, பிப்ரவரி 7-ஆம் தேதி பஞ்சாபை சோ்ந்த அம்ருத்பால் சிங் மற்றும் ரோஹித் மாசி ஆகிய இரு தொழிலாளா்களை ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Jammu & Kashmir: 2 migrant workers killed in terrorist attack.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.