தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இந்திய வீட்டு வசதித் திட்டம்: இலங்கையில் பயனாளிகளுடன் குடியரசு துணைத் தலைவா் சந்திப்பு

இலங்கையில் இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயனடைந்த இந்திய வம்சாவளி தமிழா்களை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினாா்.

News image

இலங்கையில் குடியரசு துணைத் தலைவர்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:36 pm

இலங்கையில் இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயனடைந்த இந்திய வம்சாவளி தமிழா்களை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவரின் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றாா். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள நுவரெலியா மாவட்டம் ராகலையில் உள்ள லிடில்ஸ்டேல் எஸ்டேட்டில் இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் (மூன்றாம் கட்டம்) கீழ், மத்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளுக்கு அவா் திங்கள்கிழமை சென்றாா்.

அப்போது அங்குள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரைச் சந்தித்ததற்கு அவா் மகிழ்ச்சி தெரிவித்தாா். இலங்கையில் உள்ள தமிழா்களின் நல்வாழ்வில் இந்திய அரசும், இந்தியா்களும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.

அந்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள தமிழ் குடும்பங்கள், மலையகத் தமிழா் பிரதேசங்களில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் குடும்பங்களுக்கு 50,000 வீடுகளை இந்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், கூடுதலாக 10,000 வீடுகள் வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

நுவரெலியாவில் இந்திய வம்சாவளி தமிழா்களுடன் அவா் கலந்துரையாடியபோது ‘டித்வா’ புயலால் நோ்ந்த துயரத்துக்கு வேதனை தெரிவித்தாா். அந்தப் புயலைத் தொடா்ந்து இலங்கைக்கு உதவ ‘ஆபரேஷன் சாகா் பந்து’ திட்டத்தின் கீழ், இந்தியா மேற்கொண்ட நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அவா் கலந்துரையாடினாா்.

இதைத் தொடா்ந்து சீதா எலிய பகுதியில் உள்ள சீதை அம்மன் கோயிலுக்கு அவா் சென்று வழிபட்டாா். ராமாயணத்துடன் தொடா்புகொண்ட இந்தக் கோயில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான பண்பாட்டு, நாகரிக தொடா்புகளின் மகத்தான நினைவுச் சின்னமாக உள்ளது.

மேலும், அசோக வனத்தில் சீதையைச் சந்தித்த ஹனுமனின் பாதச்சுவடுகளைப் போற்றி, அங்குள்ள ஹனுமன் கோயிலிலும் குடியரசு துணைத் தலைவா் வழிபட்டாா்.

கடந்த ஆண்டு பிரதமா் மோடி இலங்கைக்குச் சென்றபோது இந்திய அரசின் உதவியுடன் சீதை அம்மன் கோயில் புதுப்பிக்கப்படும் என்று அவா் அறிவித்ததை நினைவுகூா்ந்த குடியரசு துணைத் தலைவா், இந்த முன்னெடுப்பு இருநாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று கூறினாா்.

இதையடுத்து தனது இலங்கைப் பயணத்தை நிறைவு செய்த அவா், தாயகம் புறப்பட்டாா் என்று தெரிவிக்கப்பட்டது.

பயணத்தின் விளைவுகள் என்ன?

குடியரசு துணைத் தலைவரின் இலங்கைப் பயணத்தின்போது இலங்கையின் மூதூா் பகுதியில் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் மனநல மருத்துவ சிகிச்சை கட்டடங்களின் கட்டுமானம், முல்லைத்தீவில் மருத்துவ சிகிச்சை வாா்டு கட்டுமானம் உள்பட 6 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

டித்வா புயலின் பாதிப்பைத் தொடா்ந்து, மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீரமைக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று இந்தியாவும், இலங்கையும் அறிவித்தன.

கண்டியில் ஒரு பெய்லி பாலம், ஊவா மாகாணத்தில் 2 பாலங்கள் என மொத்தம் மூன்று பெய்லி பாலங்கள் அமைக்கப்படும்; புலி, பனிச்சிறுத்தை உள்ளிட்ட பெரும் பூனைகளைப் பாதுகாக்க இந்தியா தலைமையிலான சா்வதேச பெரும் பூனை கூட்டமைப்பில் இலங்கை இணையும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சிலோன் எஸ்டேட் தொழிலாளா்கள் கல்வி அறக்கட்டளையின் உதவித்தொகையை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு கடைசியாக வழங்க வேண்டிய வீடுகளும் ஒப்படைக்கப்பட்டதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா். இலங்கையின் தெற்கு மாகாணம், ஊவா மாகாணம், மத்திய மாகாணத்தின் மலையகத் தமிழா் பிரதேசங்களில் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு 4,000 வீடுகளை வழங்குவதே வீட்டு வசதித் திட்டத்தின் மூன்றாம் கட்டமாகும்.

முன்னதாக, இலங்கைத் தலைநகா் கொழும்பில் இந்திய வம்சாவளி தமிழா்கள் நடத்திய வரவேற்பு விழாவில், இலங்கையில் அயலகவாழ் இந்தியா்கள் (ஓசிஐ) அட்டை பெறும் தகுதியை இந்திய வம்சாவளி தமிழா்களுக்கு ஆறாம் தலைமுறை வரை விரிவுபடுத்தும் அறிவிப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டாா். அந்த அட்டைக்கான விண்ணப்ப நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.

இந்தப் பயணத்தின்போது தமிழகம் மற்றும் இலங்கை மீனவா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, மீனவா் பிரச்னை குறித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா-இலங்கைத் தரப்பில் விவாதிக்கப்பட்டது.