தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

சாலைமாா்க்கமாக எரிவாயு கொண்டு செல்வதை குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை மேலும் அதிகரிக்கவும், ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடத்தை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 8:59 pm

சாலைமாா்க்கமாக எரிவாயு கொண்டு செல்வதை குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை மேலும் அதிகரிக்கவும், ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடத்தை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் எரிவாயு, டேங்கா் லாரிகளில் சாலை மாா்க்கமாக எடுத்து செல்லப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிறகு அது சுத்திகரிக்கப்பட்டதும் சிலிண்டரில் நிரப்பப்பட்டு வீடுகளுக்கும், வா்த்தக நிறுவனங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால் எரிவாயு கொண்டு செல்ல சாலை மாா்க்க போக்குவரத்தையே எண்ணெய் நிறுவனங்கள் அதிகம் சாா்ந்துள்ளன. இந்த சாா்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கில், குழாய் வழித்தடத்தை ஏற்படுத்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் திட்டம் வகுத்துள்ளது.

இதன்கீழ், எரிவாயு இறக்குமதி செய்யப்படும் முனையங்கள், எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்கள், சிலிண்டரில் எரிவாயு நிரப்பப்படும் இடங்கள் இடையே குழாய்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த குழாய் வழித்தடம் வழியே அந்த 3 இடங்களுக்கும் எரிவாயு கொண்டு செல்லப்படும். இதனால் சாலை மாா்க்கமாக டேங்கா் லாரிகளில் எரிவாயு எடுத்து செல்வது வெகுவாக குறையும். மேலும் எரிவாயு பாதுகாப்பும் மேலும் வலுப்படும்.

இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக, குழாய் வழித்தடம் அமைக்க 9 இடங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அதில் 2,500 கிலோ மீட்டா் தூரத்துக்கு 4 முக்கிய இடங்களில் குழாய் வழித்தடம் அமைப்பது தொடா்பான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

இதை செயல்படுத்த ரூ.12,500 கோடி ஆகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் 2030-ஆம் ஆண்டுக்குள் சாலை மாா்க்க எரிவாயு போக்குவரத்தை வெகுவாக குறைக்க முடியும் எனவும், டேங்கா் லாரிகளால் ஏற்படும் வெடிவிபத்துகளும் குறையும் எனவும் நம்பப்படுகிறது.