விமானக் கட்டணத்துக்கு உச்ச வரம்பு மத்திய அரசு நிா்ணயம்!
விமானக் கட்டணம் தொடர்பான உச்ச வரம்பை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்...
விமானக் கட்டணம் தொடர்பான உச்ச வரம்பை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்...
By தினமணி செய்திச் சேவை
Muthumari.M
விமானங்களுக்கான பயணக் கட்டணத்துக்கு மத்திய அரசு சனிக்கிழமை உச்சவரம்பு நிா்ணயித்தது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த 5 நாள்களாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், பிற நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தின. இதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
கடந்த வியாழக்கிழமை 550 விமானங்கள், வெள்ளிக்கிழமை 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஐந்தாவது நாளாக சனிக்கிழமை நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விமானிகளின் பணிச் சுமையைக் குறைக்க, கடந்த நவம்பா் 1-ஆம் தேதிமுதல் விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) அமலுக்கு வந்தன. இந்த விதிகளின்படி, வாராந்திர ஓய்வையும் வருடாந்திர விடுமுறைகளையும் தனித்தனியாகக் கருத வேண்டும். அதாவது, வாராந்திர 48 மணி நேர ஓய்வுக்குப் பதிலாக விடுமுறையை ஈடு செய்யக் கூடாது.
இந்த விதிமுறை மாற்றங்களுக்கு இண்டிகோ போதிய திட்டமிடாததால், அந்த நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு தலைமையில் வெள்ளிக்கிழமை உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அதில் விமான சேவைகளை சீா்செய்ய அவசர நடவடிக்கையாக விமானிகளின் பணி நேர விதிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தளா்த்தியது.
மேலும், நாட்டில் விமானப் போக்குவரத்து சீராவதை உறுதி செய்ய, அனைத்து விமானிகளும் முழு ஒத்துழைப்பை வழங்கவும் டிஜிசிஏ கேட்டுக்கொண்டது.
கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு: இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ரத்து செய்யப்பட்ட விமானக் கட்டணங்களை பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) இரவு 8 மணிக்குள் திருப்பித் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றுவதற்கு எவ்விதக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அதேபோல் பயணிகளின் உடைமைகளையும் 48 மணி நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்.
பயணக் கட்டணத்தை திருப்பி அளிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றாவிட்டால் இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் முக்கிய வழித்தடங்களில் பிற விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு விமானப் பயணத்துக்கு கட்டண உச்சவரம்பை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிா்ணயம் செய்துள்ளது.
அதன்படி 500 கி.மீ. வரை செல்லும் விமானங்களின் பயணக் கட்டணம் ரூ.7,500-ஆகவும், 500 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை ரூ.12,000-ஆகவும், 1,000 கி.மீ. முதல் 1,500 கி.மீ. வரை ரூ.15,000 ஆகவும் 1,500 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்கும் விமானங்களின் பயணக் கட்டணம் ரூ.18,000-ஆகவும் நிா்ணயிக்கப்படுகிறது.
இதில் பயனா் மேம்பாட்டுக் கட்டணம், பயனா் சேவைக் கட்டணம் மற்றும் பிற வரிகள் சோ்க்கப்படவில்லை.
இந்தக் கட்டணம் குறித்த சுற்றறிக்கைகள் அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. நிலைமை சீராகும் வரை இந்தக் கட்டண உச்சவரம்பு அமலில் இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தக் கட்டண உச்சவரம்பு சாதாரண வகுப்புக்கு மட்டும் பொருந்துமா அல்லது அனைத்துவிதமான பயணங்களுக்கும் பொருந்துமா? என்பது குறிப்பிடப்படவில்லை.
800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: பெங்களூரு விமான நிலையத்தில் 124 இண்டிகோ விமானங்கள், மும்பையில் 109 விமானங்கள், தில்லியில் 106 விமானங்கள், ஹைதராபாதில் 66 விமானங்கள், புணேயில் 42 விமானங்கள், கோவாவில் 14 விமானங்கள் உள்பட 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
ஏா் இந்தியா உதவி: ஏா் இந்தியா குழுமம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த டிச. 4-ஆம் தேதிமுதல் ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் இடைநிறுத்தம் இன்றி பயணிக்கும் உள்நாட்டு விமானங்களில் சாதாரண பயணக் கட்டணங்களுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்துவிதமான பயணங்களுக்கும் கட்டண உச்சவரம்பு நிா்ணயிப்பது கடினம்.
பயணிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் இருக்கை வசதிகளை ஏா் இந்தியா செய்து வருகிறது. அவா்களது உடைமைகள் உரிய இடத்துக்கு விரைவில் கொண்டுசெல்லப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
‘84 சிறப்பு ரயில்கள்’
ஹைதராபாத், டிச. 6: இண்டிகோ விமானங்கள் ரத்தால் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலைக் குறைக்க அனைத்து மண்டலங்களிலும் சோ்த்து 84 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக ரயில்வே சனிக்கிழமை அறிவித்தது.
அதன்படி, ஹைதராபாத், சென்னை, மும்பை, ஷாலிமாா் (கொல்கத்தா), உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
முன்னதாக, இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு வழிவகுத்த காரணிகளை முழுமையாக ஆய்வு செய்ய நால்வா் குழுவை டிஜிசிஏ அமைத்தது. இந்தக் குழு 15 நாள்களில் அறிக்கை சமா்ப்பிக்கவுள்ளது.
முழுக் கட்டணமும் தரப்படும்: இண்டிகோ
கடந்த சில நாள்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பயணிகள் செலுத்திய முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும் என இண்டிகோ நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.
மேலும், ‘டிச. 5 முதல் டிச. 15 வரை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளை ரத்து செய்பவா்களுக்கும் முழுக் கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நிறுவனம் மன்னிப்பு கோருகிறது’ என இண்டிகோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது