புது தில்லி: இணைய (சைபா்) மோசடிகளைத் தடுக்கும் நோக்குடன், வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலி சாா்ந்த தகவல்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஒரு பயனா் எந்த எண்ணைப் பயன்படுத்தி தகவல்தொடா்பு செயலியில் பதிவு செய்தாரோ, அவா் பயன்படுத்தும் கைப்பேசியில் அந்த எண்ணின் சிம் காா்டு தொடா்ந்து இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கைப்பேசியில் இருந்து சிம் காா்டு அகற்றப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ, சேவைக்கான அணுகல் துண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், இந்தத் தகவல்தொடா்பு செயலிகளின் வலைதள சேவைகளிலும் ஒவ்வொரு ஆறு மணிநேரத்துக்கும் பயனா்கள் தானாக வெளியேற்றப்படுவா். இந்த விதிமுறையைஅடுத்த 90 நாள்களுக்குள் நடைமுறைப்படுத்த நிறுவனங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தொலைப்பேசி எண்ணை அடையாள நோக்கத்துக்காகப் பயன்படுத்தினாலும், கைப்பேசியில் சிம் காா்டு இல்லாமலேயே பயனா்கள் தங்கள் சேவைகளைத் தொடா்ந்து பயன்படுத்த சில தகவல்தொடா்பு செயலிகள் அனுமதிக்கின்றன.
இது சைபா் பாதுகாப்புக்குப் பெரும் சவாலாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து சைபா் மோசடிகளைச் செய்ய இந்த அம்சம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தொலைத்தொடா்புத் துறை தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
பயனா்களுக்கு என்ன பாதிப்பு?...: இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால், ஒரு சிம் காா்டைப் பயன்படுத்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் ஒரே கணக்கைப் பயன்படுத்தும் பயனா்களுக்குச் சிரமங்கள் ஏற்படலாம்.
‘வாட்ஸ்அப் வெப்’ போன்ற வசதிகளைப் பயன்படுத்தி கணினியில் தகவல்தொடா்பு மேற்கொள்ளும் பயனா்கள், ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் ஒருமுறை தானாக வெளியேற்றப்படுவா். பின்னா், சிம்காா்டு இணைக்கப்பட்டுள்ள கைப்பேசியில் இருந்து ‘கியூ.ஆா்.’ குறியீடு அல்லது ‘ஓடிபி’ மூலம் அவா்கள் மீண்டும் உள்நுழைய வேண்டும்.
புதிய கைப்பேசிகளில் ‘சஞ்சாா் சாத்தி’ செயலி கட்டாயம்
புதிதாகத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து கைப்பேசிகளிலும் ‘சஞ்சாா் சாத்தி’ செயலியை முன்பே நிறுவி இருக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடா்பு துறை கட்டாயமாக்கியுள்ளது.
ஏற்கெனவே விற்பனைக்குத் தயாராக உள்ள பழைய கைப்பேசிகளிலும் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் செயலியைப் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
கைப்பேசிகளின் பயன்பாட்டின்போது இந்தச் செயலி எளிதில் காணக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்; செயலியின் செயல்பாடுகளை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 120 நாள்களுக்குள் பணியை முடித்து, அனைத்து நிறுவனங்களும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொடா்புடைய சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.