டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

எக்ஸ்பிரஸ்வே சாலைக்காக நிகழ்த்தப்பட உள்ள பசுமைப்படுகொலை: தண்டனை நமக்கும் சேர்த்துத்தான்

பெங்களூரூ - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ்வே சாலையை அமைப்பதற்கான பணிகள் புவியியல் அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:55 pm

ENS


பெங்களூரூ - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ்வே சாலையை அமைப்பதற்கான பணிகள் புவியியல் அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

சாலை அமைப்புப் பணிக்காக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளதாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் வானிலை மாற்றத்துக்கான மத்திய அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ்வே திட்டத்துக்காக வெட்டப்படும் அதிகளவு மரங்களுக்கு இணையாக, மிகப்பெரிய அளவில் மரங்களை நடும் திட்டத்தை செயல்படுத்தவும் நிபுணர்கள் உயர்மட்டக் குழு ஆராய்ந்து வருகிறது.

பேஸ் 3 திட்டத்தின் கீழ் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவின் இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் இருந்து ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், குடிபலா மண்டல் பகுதியில் உள்ள ராமாபுரம் கிராமம் வரை சாலை அமைக்கும் பணிக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

இது சரியாக 106.569 கி.மீ. நீளமுடைய சாலையாகும். மற்ற இரண்டு சாலைத் திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிக நீளமான சாலைத் திட்டமாகும். 1,118.105 ஹெக்டேரில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்கு ரூ.5,774.43 கோடி பணம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக தமிழகத்தின் மஹிமண்டலம் வனப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், 10,450 மரங்கள் மண்ணில் வீழ்த்தப்பட உள்ளது. மேலும் 368 கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளதாக மதிப்பீட்டு நிபுணர்கள் குழுவிடம் தேசிய நெடுஞ்சாலைகள் துறை அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Story image

இடிக்கப்படும் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உரிய இழப்பீட்டை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டப்பட உள்ள மரங்களுக்கு யார் இழப்பீட்டைத் தருவார்கள்.. 

இந்த மரங்கள் எல்லாம் மனிதர்கள் சுவாசிக்க வெறும் ஆக்ஸிஜனைத்தானே தருகின்றன. அதனால்தான் வெட்டிக் கொள்ளட்டும் என்று மனிதர்களும் அமைதியாக இருக்கிறார்கள். ஒரு வேளை இவை மனிதர்களுக்கு அத்தியாவசியமான இலவச வைஃபை சேவையை அளித்தால் இத்தனை மரங்களும் வெட்டப்படுமா? 

பேஸ் - 2ன்படி, கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் பங்கார்பெட்டில் இருந்து ஆந்திரத்தின் சித்தூர் வரை சுமார் 85 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் பாலாமனேர் ரேஞ்சில் உள்ள ராயல யானைகள் காப்பகம் வனப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை பரிசீலித்த ஆந்திர அரசு, யானைகள் வெகு சுலபமாக வனப்பகுதியில் சுற்றித் திரியவும், எந்த தொந்தரவும் அவைகளுக்கு ஏற்படாத வகையில் திட்டத்தை வடிவமைக்கும்படி தேசிய நெடுஞ்சாலைகள் துறையிடம் வரைவு திட்டத்தைக் கோரியுள்ளது. இதில் 63.7 ஹெக்டேர் வனப்பகுதி சாலையாக மாற உள்ளது.

இந்த சாலையானது கௌண்டின்யா வன விலங்குகள் காப்பகத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைய உள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள 24,800 மரங்கள் சாலைத் திட்டத்துக்காக கொன்று குவிக்கப்பட உள்ளது.

இதையெல்லாம் தாண்டி பேஸ் 1 திட்டத்தில்தான் அதிக அளவில் மரங்கள் வெட்டிச் சாய்க்க உள்ளதாக தெரிகிறது. பெங்களூருவில் இருந்து கோலார் மாவட்டம் வரை 73 கி.மீ. தூரத்துக்கு இந்த சாலை அமைகிறது. இதற்காக சுமார் 1 லட்சம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட உள்ளன. எந்தப் பலனையும் எதிர்பாராமல் நமக்கு சுத்தமான காற்று, மழை, நிழல் போன்றவற்றைக் கொடுத்து வந்த வெறும் 1 லட்சம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட உள்ளது. இதற்கு உலகில் வாழும் அனைவருக்குமே வரும் ஆண்டுகளில் ஐயோ மழை இல்லையே, வெயில் கொளுத்துகிறதே என்று நாம் புலம்பும் போது மரங்களை வெட்டியதால்தான் என்று தெரிந்தாலும் என்ன நடந்துவிடப்போகிறது.

பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் நிறைவேற்றப்பட்டால் மிக விரைவாக மக்கள் இரு நகரங்களையும் கடக்கலாம் என்று தேசிய நெடுஞ்சாலைகள் துறை அறிவித்துள்ளது. சுமார் 90 மீட்டர் அகலம் கொண்டதாக இந்த சாலைகள் அமைந்திருக்கும். தற்போது இவ்விரு நகரங்களும் கிருஷ்ணகிரி மற்றும் ராணிப்பேட்டை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையும், கோலார், சித்தூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் வழியாக மற்றொரு சாலையும் இணைக்கின்றன.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் பெங்களூரு - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ்வே திட்டத்துக்காக மட்டும் சுமார் 1,35,000 மரங்கள் வெட்டப்பட உள்ளன. 

இத்தனை மரங்களுக்கும் இணையாக மரக்கன்றுகளை நடும் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாய பொறுப்பில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை உள்ளது. இதுவரை எப்படியோ.. இனியாவது இந்த சூழ்நிலையிலாவது இத்தனை அதிகம் மரங்களை வெட்டும் திட்டங்கள் பரிசீலனைக்கு வரும் போதே, அதற்கு இணையாக மரக்கன்றுகளை நடும் பணிகளைத் தொடங்கிவிட வேண்டும்.

அப்போதுதான், ஒரு மரம் மண்ணில் வீழ்த்தப்படும்போது, அதற்கு இணையான அளவு மரங்கள் பூமியில் இருக்கும். அதன் நிழலில் நாமும் சில காலம் இங்கே தங்கிச் செல்லலாம்.

யாருக்காவது குழி தோண்டவும் மண் அள்ளிப் போடவும் விரும்பினால் அதை விதைகளுக்குச் செய்யுங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.