பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆன்லைன் உணவு உடல்நலத்துக்கு நல்லதா கெட்டதா?

நான் அடிக்கடி ஆன்லைன் மூலம் உணவுகளை வரவழைத்துச் சாப்பிடுகிறேன்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:24 am

தினமணி


நான் அடிக்கடி ஆன்லைன் மூலம் உணவுகளை வரவழைத்துச் சாப்பிடுகிறேன். கடந்த வாரம் அப்படி சாப்பிட்டபோது மறுநாள் வாந்தி,  பேதி காய்ச்சல் என்றெல்லாம் ஏற்பட்டு மிகவும் துன்பப்பட்டுவிட்டேன். கெட்டுப்போன அல்லது ஏதேனும் விஷசேர்க்கையுடைய உணவைச் சாப்பிட நேர்ந்தால், ஏற்படும் அறிகுறி, சிகிச்சை போன்ற விளக்கங்கள் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளனவா? காலத்தின் கட்டாயமாகிப் போன ஆன்லைன் உணவுகளைத்தான் என் போன்ற இளைஞர்கள் தற்சமயம் நம்பி வாழ வேண்டியுள்ளது.

- சிவ. சிதம்பரம், சென்னை.

உணவில் ஏதேனும் உடலுக்கு ஒவ்வாத பொருளின் சேர்க்கையிருந்தால், அதைத் தொட்டு அருந்திவிட்டால், கையில் நமைச்சல், எரிச்சல், அழற்சி, காய்ச்சல், வலி, கொப்புளம், கை விரல்களில் தொடு உணர்ச்சியின்மை, நகம், ரோமம் உதிர்தல், வீக்கம் ஆகியவை ஏற்படும். வெட்டிவேர், தூய சந்தனம் ஆகியவற்றை அரைத்து உடன் பூச, உபாதைகள் நன்கு குணமடைந்துவிடும்.

விஷப்பொருள்கள் கலந்த உணவை வாயிலிட்டவுடன் உமிழ்நீர் அதிகம் கசியும், நாக்கு, உதடுகள், உணர்ச்சி இழக்கும். எரிச்சல், தினவு, பற்கூச்சம், சுவையறிய முடியாமை, தாடையை அசைக்க முடியாமை ஆகியவை உண்டாகும். இந்நிலையில் வெட்டிவேர் முதலியவற்றால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

அவசரத்தில் உணவைச் சாப்பிட்டுவிட்டால், இரைப்பையை அடைந்தவுடன் கெட்டுப்போன அல்லது விஷங்கலந்த உணவு, வியர்வை, மயக்கம், உப்புசம், வெறி, பிரமை, மயிர்க்கூச்சம், வாந்தி, எரிச்சல், கண், இதயம் இவை ஸ்தம்பித்தல், பலவிதமான புள்ளிகள் உடலில் காணுதல் ஆகியவை உண்டாகும்.

பெருங்குடலில் உணவு நுழைந்து விட்டால், பல நிறங்களுடன் வாந்தியாகும். சிறுநீர் பெருகும். பேதியாகும்.  இளைப்பு, உடல்வெண்மை, மகோதரம் (ASCITIS) பலக்குறைவு உண்டாகும்.

Story image

இரைப்பையில் விஷஉணவு சேரப் பெற்றவருக்கு வாந்தியும், பெருங்குடல் பகுதியில் சேர்ந்தால் பேதியும் செய்ய வேண்டும்.

மூலிகை மருந்துகளாகிய மஞ்சள், மரமஞ்சள், மலயமுக்கு, இங்குதம், நொச்சி, அவரை, இங்குபத்திரி, வசம்பு, சிறுகீரை, கோழி முட்டை, கார்போக அரிசி ஆகியவற்றை விஷத்தை நீக்குவதற்காகத் தண்ணீரில் நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி, மூக்கில் சில துளிகளை விட்டுக் கொண்டும், கண்ணில் அந்நீரை ஊற்றி அலம்புவதையும், உள்ளுக்குப் பானமாகச் சாப்பிட்டும் நம் முன்னோர் பாதுகாத்துக் கொண்டனர். இம் மருந்துகளின் கூட்டுச் சேர்க்கை ரெடிமேடாக விற்பனையில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

Story image

விஷ அல்லது கெட்டுப்போன உணவை உண்டவருக்கு வாந்தி, பேதி செய்வித்து உரியகாலத்தில் இதயத்தை வலுப்படுவதற்காக   மூன்று மில்லி கிராம் அளவில் நுண்ணிய தங்க பஸ்பத்தூளை தேனுடன் சாப்பிட, தாமரை இலையில் நீர்போல், தங்கபஸ்பம் உட்கொண்டவனின் உடலில் விஷம் தங்குவதில்லை; ஆயுளும் நீடிக்கிறது என ஆயுர்வேதம் உபதேசித்திருக்கிறது.

ஐந்து வகையான நிலையிலிருப்பவர்களுக்கு ஒவ்வாத உணவுகளை உண்டாலும் அவற்றை எதிர்க்கும் சக்தி உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும்.  அவர் -

  • உடற்பயிற்சி செய்பவர் 
  • நெய்ப்பு எனும் எண்ணெய்ப் பசையுள்ளவர்
  • பசித்தீ குறையாதிருப்பவர்
  • இளமையுள்ளவர்
  • பலசாலி

இந்த ஐந்தையும் பெற்றிருக்கக் கூடிய வகையில் நீங்கள் உடல் திண்மையை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இருப்பினும் தீயவகை உணவுகளை முடிந்தவரை தவிர்த்து நல்ல உணவுகளையே தேர்ந்தெடுத்துச் சாப்பிடப் பழகிக் கொள்ளவும். 'அன்னாத் புருஷ:' எனும் வேதவாக்கின்படி சோற்றால் ஆன உடல் எனும் சுவர் நிலைத்திருக்க முயற்சிகளைச் செய்யும். 

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.