முறையற்ற உணவுப் பழக்கம், போதுமான தூக்கமின்மை, சதா தூண்டப்பட்ட விளையாட்டு ஆர்வத்துடனேயே இருப்பதால் வீட்டிலும், வெளியிலும் ஒரு சாதாரண மனிதன் அன்றாடக் கடமைகளைக் கூட மறந்து விடும் போக்கு, நடைமுறைக் கடமைகளைக் நிறைவேற்ற முடியாததால் உண்டாகும் சுய கழிவிரக்கம். கேமிங் அடிக்ஷனால் வேலைகள் தடைபடும் போது தேங்கிப் போகும் வேலைப்பளுவினால் உண்டாகும் மன அழுத்தம், குழப்பம், சதா சர்வ காலமும் கேம் ஆடுவதைத் தவிர வேறு எந்த ஒரு வேலையும் நிம்மதி தராதோ எனும் சஞ்சல உணர்வு. இவற்றால் உண்டாகும் சுய கட்டுப்பாடற்ற நிலை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் கேமிங் அடிக்ஷனால் மனித வாழ்வில் நிகழக் கூடிய மாற்றங்களை. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் மனிதர்களை நட்பால் இணைப்பதற்குப் பதிலாக தனித்தனி தீவுகளாக்கி தனிமைப் புதைகுழிக்குள் தள்ளி விடுவதற்கான வாய்ப்புகளாக மாறி விடுகின்றன என்கிறார்கள் இது குறித்த ஆய்வுகளை முன்னெடுத்து நடத்திய மருத்துவக் குழுவினர்.