35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கொரு ஒரு எச்சரிக்கை. குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது ஏற, ஏற பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களது குழந்தை பெறும் திறனும் பாதிப்புக்கு உள்ளாகிறது எனப் பல்லாண்டுகளாகவே மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 35 வயதுக்கு மேல் ஒரு குழந்தையை கருப்பையில் தாங்கி 10 மாதம் சுமந்து போஷாக்காக வளர்த்து பிரசவிக்கும் திறன் பெண்களுக்கு குறைந்து விடுகிறது. வயது ஏற, ஏற கருப்பை தனது ஆரோக்யத்தைப் படிப்படியாக இழந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே மகப்பேறு மருத்துவர்கள் திருமணமான தம்பதிகளிடையே விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆவலை ஊக்குவிப்பதோடு, பணி மாறுதல், உயர் கல்வி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருத்தல், உள்ளிட்ட காரணங்களுக்காக எல்லாம் குழந்தப்பேற்றை தள்ளிப்போட நினைக்கும் மனப்பான்மையையும் தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள்.