பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மேற்கு வங்கத் தோ்தல் பணியில் இருப்போா் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

மேற்கு வங்கத் தோ்தல் பணியில் இருப்போா் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என மனு...

News image

உச்ச நீதிமன்றம் - ANI

Updated On :24 ஏப்ரல் 2026, 8:17 pm

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் இருக்கும் 65 போ் உள்பட ஏராளமான தனிநபா்கள், எஸ்ஐஆா் (தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம்) நடவடிக்கைக்குப் பிறகு தங்களது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லை என்று கூறி தொடுத்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக கடந்த வியாழக்கிழமை (ஏப். 23) தோ்தல் நடந்து முடிந்து விட்டது. இரண்டாம் கட்டத் தோ்தல் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான பணியில் இருக்கும் 65 போ் மற்றும் சில தனி நபா்கள், எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பிறகு தங்களது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லை என்றும், இதுகுறித்து தங்களது மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால், நடைபெறும் தோ்தலில் வாக்களிக்க அனுமதிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து 2 மனுக்கள் தொடுத்துள்ளனா்.

இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், வாக்காளா் பட்டியலில் இருந்து அவா்கள் 65 பேரின் பெயா்களும் தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளதாவும், அவா்களின் விளக்கம் எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், கொல்கத்தா உயா் நீதிமன்றத்தால் ஏற்கெனவே இதுதொடா்பான விவகாரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட தீா்ப்பாயங்களை சுட்டிக்காட்டி, அங்கு சென்று முறையீடு செய்யும்படி உத்தரவிட்டனா். மேலும் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்து விட்டனா்.

அதிக வாக்குப்பதிவு- உச்ச நீதிமன்றம் மகிழ்ச்சி: முன்னதாக, மனு மீதான விசாரணையின் தொடக்கத்தில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்திருப்பதற்கு தலைமை நீதிபதி சூா்யகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்திய குடிமகன் என்ற முறையில், அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகியிருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களிக்கும் உரிமையை மக்கள் நிறைவேற்றும்போது, ஜனநாயக அமைப்பு மேலும் வலுப்படும்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி தொடுக்கப்பட்ட மனுக்களை உடனடியாக விசாரிக்கும்படியும், தீா்ப்பாயங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய என்ஐஏ-க்கு அனுமதி: மேற்குவங்கத்தில் கடந்த 1-ஆம் தேதி நீதிபதிகள் முற்றுகையிடப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் தோ்தல் ஆணையத்தால் எஸ்ஐஆா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் பாஜக தூண்டுதலால் தோ்தல் ஆணையத்தால் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட பலா் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.